ஜனாதிபதியின் கூற்றை மறுக்கிறார் மஹிந்தா!

ஜனாதிபதியின் கூற்றை மறுக்கிறார்  மஹிந்தா!

ராஜபக்‌ஷ அரசு தொடர்ந்தும் ஆட்சியில் இருந்திருந்தால் ஜெனிவா அமர்வில் நிலைமை மோசமாகி, பொருளாதாரத் தடை விதிப்பதற்கு இடமிருந்தது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கடுமையான விமர்சனத்தை முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌ஷ எம்.பி. நிராகரித்துள்ளார்.

அத்துடன், லிபிய ஜனாதிபதி முஹமர் கடாபியின் தோளில் கையைப் போட்டிருந்ததால், மேற்குலக நாடுகள் இலங்கையுடன் விலகியிருந்தன என்று ஜனாதிபதி மைத்திரி குறிப்பிட்டுள்ள கருத்துக்கு விளக்கமளித்துள்ள மஹிந்த ராஜபக்‌ஷ அந்தப் புகைப்படத்தில், தனது தோளில்தான் கடாபி கைபோட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா விவகாரம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஊடகங்களைச் சந்தித்து கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை கடுமையாகச் சாடியிருந்தார். இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரியின் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் இன்று விடுத்த விசேட அறிக்கையொன்றிலேயே மஹிந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை,

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை இலங்கைக்குக் கிடைத்த இராஜதந்திர வெற்றி என சிலர் குறிப்பிடும் கருத்துக்கு என்னால் இணங்க முடியாது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் கருத்து வெளியிட்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போது மனித உரிமைகள் பேரவையின் ஒழுங்குப் பத்திரத்திலிருந்து இலங்கையை நீக்க முடிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரைப் பாதுகாப்பதே இலங்கை அரசின் முதலாவது பொறுப்பாகும். நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் 6, 8ஆவது பரிந்துரைகள் அந்தப் பொறுப்புக்கு நேரடியாக எதிரானதாகும். ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு வெள்ளையடிக்க இன்னும் முயற்சிக்கப்படுகின்றது என்பதை நான் கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கை, ஜெனிவாவில் பெற்றுக்கொண்ட மிகப்பெரிய மானியம் இது என்றும், ராஜபக்‌ஷ அரசு ஆட்சியில் இருந்திருந்தால், நிலைமை இதைவிட மோசமானதாகியிருக்கும் என்றும், பொருளாதாரத் தடைவிதிப்பதற்கு இடமிருந்தது என்றும் சிலர் கூறியதை எம்மால் கேட்கமுடிந்தது. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் கடலுணவு உற்பத்திகளுக்குத் தடைவிதித்தமை அரசியல் மற்றும் மனித உரிமைகள் விடயங்களால் அல்ல இந்து சமுத்திரத்தின் கடலுணவு ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக சட்டவிரோதமாக நடவடிக்கை மேற்கொண்டமையாலேயேயாகும்.

மேலும், ஜி.எஸ்.பி. பிளஸ் என்பது அரசில் நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படுவதாகும். இதேவேளை, லிபிய ஜனாதிபதி முஹமர் கடாபியின் தோளில் கையைப் போட்டிருந்ததால், மேற்குலக நாடுகள் இலங்கையுடன் விலகியிருந்தன என சிலர் குறிப்பிட்டனர். இவ்வாறு கூறப்படும் புகைப்படத்தில், எனது தோளில்தான் கடாபி கைபோட்டுள்ளார்.போர்நிறுத்தப் பேச்சு நடத்த முக்கிய இராஜதந்திரிகள் எமது நாட்டுக்கு வந்தபோது, இந்த நாட்டின் பிரதானிகள் கொழும்புக்கு வெளியே சென்று, எம்பிலிப்பிட்டிய பகுதிக்குச் சென்று அவர்களை அழைத்துச் சென்றதன் பின்னர், நாம் அவர்களுக்கு மரவள்ளிக்கிழங்கை கொடுத்து அனுப்பினோம் என்றும் கூறினர்.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், இராணுவச் செயற்பாட்டை நிறுத்துவதற்கு எனக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வருகைதந்த பிரிட்டன், பிரான்ஸ் அமைச்சர்களுக்கு வழங்கிய உணவு என்ன என்பது எனக்குத் தற்போது ஞாபகத்தில் இல்லை. ஆனால், யுத்தத்தை நிறுத்துவதை நான் நிராகரித்தேன் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். வெளிநாட்டின் துன்பங்களுக்கு நான் அடிபணியாததால்தான், நாம் இன்று பயங்கரவாதம் இல்லாத நாட்டில் வாழ்கின்றோம். இலங்கை மக்கள் வாக்குரிமை ஊடாக அரசொன்றை ஸ்தாபிப்பது, நாட்டுக்குப்பொருத்தமான நடிவடிக்கைகளை எடுப்பதற்காகவேயன்றி, வெளிநாட்டுப் பலம்மிக்கவர்கள் கூறும் அனைத்திற்கும் தலையாட்டுவதற்கல்ல. ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் இந்த யதார்த்தம் அவ்வாறே பொருந்தும் என்றுள்ளது.

(யாழ் உதயன்)

Share This Post

Post Comment