பாலியல் வல்லுறவு – நான்கு இராணுவத்தினருக்கு 30 ஆண்டுகள் சிறை!

பாலியல் வல்லுறவு – நான்கு இராணுவத்தினருக்கு 30 ஆண்டுகள் சிறை!

கிளிநொச்சி மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டு இரண்டு பெண்கள் மீது 4 இராணுவ சிப்பாய்கள் மேற்கொண்ட கூட்டுப்பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்கில் 4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி இரவில், விசுவமடு பகுதியில் மீள்குடியேறி, தங்கள் காணிகளைத் துப்பரவு செய்வதில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாக விசுவமடு இராணுவ முகாமைச் சேர்ந்த 4 இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவத்தில் இரண்டு குழந்தைகளின் தாயாகிய 27 வயதுப் பெண் ஒருவரும் ஐந்து குழந்தைகளின் தாயாகிய 36 வயதுப் பெண் ஒருவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது உள்பட ஐந்து குற்றங்கள் ராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டனர்.

நள்ளிரவு வேளையில் பாதுகாப்பற்ற தற்காலிகக் கூடார வீடொன்றில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசம் பெரும் அச்சத்தில் மூழ்கியது.

விசுவமடு பிரதேச இராணுவ முகாமில் பணியில் இருந்த பண்டித கெதர சாந்த சுபசிங்க, பத்திரண பண்டாரநாயக்க பிரியந்த குமார, தெல்கொல்லகே தனுஸ்க புஸ்பகுமார, கொப்பேராலகே கெதர தனுஸ்க பிரியலால் ரத்நாயக்க ஆகிய 4 இராணுவ சிப்பாய்கள் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். இவர்களில் ஒருவர் தலைமறைவாகியுள்ளதையடுத்து, அவர் இல்லாமலேயே வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், ராணுவ சிப்பாய்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து 30 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.

எண்பத்தியொரு பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் வாசித்த நீதிபதி இளஞ்செழியன், இந்தச் செயலின் மூலம், யுத்தம் நடைபெற்றபோது காப்பாற்றப்பட்டிருந்த அந்தப் பெண்களின் மானத்தை யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், இந்த 4 இராணுவ சிப்பாய்களும் சூறையாடியிருக்கின்றனர் என்று கூறினார்.

ராணுவத்தின் பாலியல் வல்லுறவு குற்றம் என்பது ஒரு போர்க் குற்றம், மனித நேயத்திற்கு எதிரான குற்றம் என ஐ.நா. யுத்த குற்ற நீதிமன்ற சட்டங்களிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சடடங்களிலும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது எனவும் நீதிபதி இளஞ்செழியன் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டபோது யாழ் மேல் நீதிமன்றத்தில் பொதுமக்கள் நிறைந்திருந்தனர். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றக் கட்டிடத்தின் முதலாம் மாடியில் அதிரடிப் படை காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். நீதிபதி இளஞ்செழியனுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, எதிரிகள் நான்கு பேரும் பாதுகாப்பாக சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment