13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு அர்த்தபுஷ்டியான அதிகாரப் பகிர்வை வழங்குவதும் அதற்கு அப்பால் செல்வதும் இலங்கையில் இன நல்லிணக்கத்திற்கு அத்தியாவசியம் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த வியாழக்கிழமை இந்தியா இலங்கையை வலியுறுத்தியுள்ளது.
ஜெனீவா, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதான அனுசரணையிலான “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஊக்குவிப்பு’ பற்றிய தீர்மானத்தின் கருத்தொருமித்த நிறைவேற்றுதலின் பின்னர் பேரவையில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி அஜித்குமார், நல்லிணக்கத்துக்கான வழியானது அதிகாரப்பகிர்வின் ஊடாகவே இருக்கிறது என்பதே இந்தியாவின் உறுதியான நம்பிக்கை என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான இந்த தீர்மானத்திற்கு 36 உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து இலங்கையும் இணை அனுசரணை வழங்கியிருந்தது. இலங்கையின் தலைமைத்துவத்தின் மதிநுட்பத்தையும் அரசியல் துணிவாற்றலையும் வழங்குவதன் மூலம் இலங்கையானது உண்மையான நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் நோக்கி நகரும் என்று இந்தியா இதன்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளது. “இலங்கை தமிழ் சமூகத்தினர் உட்பட அனைத்து பிரஜைகளும் சமத்துவத்துடனும் பாதுகாப்பாகவும் சமாதானமாகவும் வாழக்கூடியதும் ஐக்கிய இலங்கைக்குள் அவர்களது அபிலாஷைகளை வெற்றிபெறச் செய்வதும் பூர்த்தி செய்வதுமான பல்லின, பல மொழி மற்றும் பல மத சமூகமொன்றாக இலங்கையின் பண்பை பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்துள்ளது” என்றும் இந்தியப் பிரதிநிதி குமார் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், மேற்படி தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க இலங்கை எடுத்த தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக, நேற்று மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ள சீனா, எனினும், ஒரு நாடு குறித்த தீர்மானங்களையும், இறையாண்மைமிக்க நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கான உபாயமாக மனித உரிமைகளை பயன்படுத்துவதையும் எதிர்க்கும் அடிப்படை கொள்கையிலேயே தாங்கள் இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இலங்கையே இணை அனுசரணை வழங்கிருப்பதும், அந்த தீர்மானம் கருத்தொருமைப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்டதையும் இலங்கைக்கும் மனித உரிமைகள் பேரவைக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட திருப்புமுனை என்று குறிப்பிட்டுள்ள தென்னாபிரிக்கா, விதிமுறை கட்டுப்பாடற்ற முறைகள் ஊடாக இன நல்லிணக்கம் நோக்கி நகர்வதற்கு இலங்கைக்கு உதவி வழங்கவும் தமது ஆர்வத்தை வெளியிட்டுள்ளது.