இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஸ்வெட்லானா அலெக்ஸிவிச்சிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. மக்களின் குரலில் அவர்களது பிரச்சனைகளை முன்வைத்தார் ஸ்வெட்லானா அலெக்ஸிவிச். அவருடைய எழுத்து, “நம் காலத்தின் துயரம் மற்றும் துணிச்சலின் நினைவுச் சின்னமாக இருக்கிறது” என நோபல் பரிசுக் குழு தெரிவித்திருக்கிறது.
இலக்கியத்திற்கான நோபல் விருதுக்கு எட்டு மில்லியன் க்ரோனர்கள் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 6 கோடி 91 லட்சம் பரிசுத் தொகையாக அளிக்கப்படும். 67 வயதாகும் அலெக்ஸிவிச் தன் நாட்டின் அரசு குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருபவர்.
இந்த விருதை அறிவித்துப் பேசிய ஸ்வீடிஷ் அகாதெமியின் தலைவர் சாரா டெனியஸ், “அலெக்ஸிவிச், முன்னாள் சோவியத் யூனியன் நாடான பேலாரஸின் மக்களைப் பற்றி ஆராய்வதில் 40 ஆண்டுகளைச் செலவழித்தவர். அவருடைய படைப்புகள் வரலாற்றைப் பற்றி மட்டுமல்லாமல், நிலையான ஒன்றைப் பற்றிப் பேசுகிறது” என்று கூறினார்.
நீண்ட காலத்திற்குப் பிறகு, புனைவல்லாத படைப்புகளை எழுதும் ஒரு எழுத்தாளருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. செர்னோபில் விபத்து குறித்த அனுபவங்களைப் பதிவுசெய்த வாய்சஸ் ஃப்ரம் செர்னோபில் என்ற அவருடைய புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. சோவியத் – ஆஃப்கன் யுத்தத்தைப் பற்றி அவர் எழுதிய பாய்ஸ் இன் ஸிங்க் நூலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அலெக்ஸிவிச் 1948ல் உக்ரைனில் உள்ள இவானோ – ஃப்ரான்கிவ்ஸ்க்கில் பிறந்தவர். அவருடைய தந்தை பெலாரஸைச் சேர்ந்தவர். தாய் உக்ரைனைச் சேர்ந்தவர். அவருடைய தந்தையின் ராணுவ பணி முடிவடைந்ததும் அவர்களது குடும்பம் பெலாரஸிற்குக் குடிபெயர்ந்தது. 1967-72 காலகட்டத்தில் அலெக்ஸிவிச் மின்ஸ்க் பல்கலைக்கழகத்தில் இதழியல் பாடத்தைப் படித்தார்.
பட்டப்படிப்பை முடிந்த பிறகு பல ஆண்டுகள் அவர் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார். 1985ல் அவருடைய முதல் புத்தகமான War’s Unwomanly Face வெளிவந்தது. இரண்டாம் உலகப் போரில் பங்கு பெற்ற பல பெண்களிடம் எடுக்கப்பட்ட பேட்டிகளை வைத்து இந்த நூல் எழுதப்பட்டிருந்தது.
இந்த பாணியைப் பின்பற்றியே, உலகின் மிக மோசமான சம்பங்களைப் பற்றிய நூல்களை அவர் படைத்தார். இதற்கு முன்பாக அவர், ஒரு எழுத்தாளராக அவர் காட்டிய “துணிச்சலுக்கும் கண்ணியத்திற்கும்” அவருக்கு ஸ்வீடிஷ் பென் விருது கிடைத்தது.
நோபல் விருதுக்கான போட்டியில் அலெக்ஸிவிச்சுடன் ஜப்பானைச் சேர்ந்த ஹருகி முராகமி, கென்யாவின் என்குகி வா தியோங் ஆகியோரும் இருந்தனர். இந்த விருதைப் பெறும் 14வது பெண் எழுத்தாளர் இவராவார். 1901லிருந்து தற்போவதை 112பேர் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளனர்.
(பிபிசி தமிழோசை)