விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்போம் – மஹிந்த சமரசிங்கா

விசாரணை அறிக்கையை  சமர்ப்பிப்போம் – மஹிந்த சமரசிங்கா

இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை அரசு வெகு விரைவில் ஆரம்பிக்கும் அதேவேளை, அதன் முதற்கட்ட அறிக்கையை 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஐ.நா. விசேட கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ளதுடன், அதன் முழு அறிக்கையை 2017ஆம் ஆண்டு சமர்ப்பிக்கவும் அரசு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்தார்.

அவர்  மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமெரிக்க விஜயத்தின் மூலம் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் குறைவடைந்துள்ளதுடன், சர்வதேசம் இலங்கை தொடர்பான தெளிவான நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது. ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தொடரில் பேசிய உலகத் தலைவர்களும் இலங்கைக்கு சார்பான கருத்துகளையே முன்வைத்திருந்தனர்.சர்வதேசத்தின் இந்நிலைப்பாட்டை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த கால ஆட்சியில் 2009ஆம் ஆண்டு ஐ.நா. தீர்மானத்தை நிராகரித்தமையாலேயே, 2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வலுப்பெற்றன.

கடந்த காலங்களில் செய்த தவறை மீண்டும் முன்னெடுக்காது, காத்திரமான நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசு தீர்மானித்துள்ளது. அந்த வகையில், ஐ.நா. பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதை போல 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் கூடவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில் எமது விசாரணை தொடர்பிலான முதற்கட்ட அறிக்கையையும், 2017 ஆம் ஆண்டு ஐ.நா. கூட்டத்தில் இதன் விரிவான அறிக்கையையும் சமர்ப்பிக்க அரசு தீர்மானித்துள்ளது. நாமும் பக்கச்சார்பற்ற விசாரணை நடைபெறவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், இந்தச் சந்தர்ப்பத்தை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றோம் என்றார்.

(யாழ் உதயன்)

Share This Post

Post Comment