சுரேஸ் மாணிக்கவாசகத்துக்கு நாடு கடத்தல் உத்தரவு !

சுரேஸ் மாணிக்கவாசகத்துக்கு நாடு கடத்தல் உத்தரவு !

கனடிய அரசினால் 1995.10.18 இல் கைது செய்யப்பட்டு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட கனடா உலகத்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்த சுரேஸ் மாணிக்கவாசகத்தை நாடு கடத்துவதற்கான உத்தரவை கனடிய உச்சநீதிமன்றம் 2002ல் இடைநிறுத்தி அவருடைய வழக்கு மீள்விசாரணைக்கான அனுமதியை வழங்கியிருந்தது.

பழமைவாதக் கட்சியினரால் கொண்டு வரப்பட்ட புதிய சட்டங்களின் அடிப்படையில் அவருக்கான நாடுகடத்தல் உத்தரவு பதின்மூன்று வருடங்களுக்குப் பின் மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டங்களுக்கு இணங்க சுரேஸ் மாணிக்கவாசகம் அரசின் இந்த உத்தரவு குறித்த தனது நிலைப்பாடுகளையும் வாதப்பிரதிவாதங்களையும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லமுடியாது. எனவே அவரைக் கனடிய அரசு எந்த நேரமும் இலங்கைக்கு அனுப்ப முடியும்.

வாய் மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தனது தரப்பு வாதத்தை முன்வைப்பதற்கான  சந்தர்ப்பத்தை வழங்காத வகையில் இந்த உத்தரவு கனடிய அமைச்சரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் அங்கத்தவராக இருந்தார், கனடா உலகத்தமிழர் இயக்கத்தைத் (WTM) தலைமை தாங்கி  வழி நடத்தினார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் என நம்பப்படுகின்றது.

கனடிய ஆங்கில ஊடகத் தகவல்களின் படி, இந்த மாதம் 60 வயதை அடையும் சுரேஸ் மாணிக்கவாசகம் மார்ச் 23, 1998ல் தான் வசிக்கும் பகுதியிலிருந்து 50 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் எங்கும் செல்லக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளின் அடிப்படையிலும் 40 ஆயிரம் பணப் பிணை மற்றும் 150 ஆயிரம் டொலர்கள் சொத்துப் பிணையிலும் விடுவிக்கப்பட்டார்.

 

Share This Post

Post Comment