கைதிகள் விடுதலை குறித்து முதல்வர் கடிதம்

கைதிகள் விடுதலை குறித்து முதல்வர் கடிதம்

இலங்கைச் சிறைகளில் இன்று திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் கைதிகள் தொடர்பில் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்க் கைதிகள் தற்போது துவங்கியுள்ள உண்ணாவிரதப் போராட்டம், கடந்த காலங்களைப் போல சிறை அதிகாரிகளால் வன்முறைத் தனமாக கையாளப்படக்கூடும் என்ற கவலைகள் உள்ளதாகவும் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

பல ஆண்டுகளாக வழக்குகள் தொடரப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள ‘இந்த துரதிஷ்டவசமான மனிதர்களின்’ பிரச்சனை கருணையுடனும் பச்சாதாபத்துடனும் அணுகப்பட வேண்டும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.

பரிந்துரைகள்

இந்தக் கைதிகளின் பிரச்சனை தொடர்பில் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள முக்கிய பரிந்துரைகள்:

1. கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பட்டியல் ஒன்றை தயாரிக்க முடியும். அந்தப் பட்டியலை ஒருவாரத்திற்குள் தயாரிக்கமுடியும்.

2.தகவல் வழங்கத் தவறியமை போன்ற சிறிய குற்றங்களுக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ள எல்லாக் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்க முடியும். அல்லது குறைந்தபட்சம் உடனடியாக பிணையிலாவது விடுவிக்கப்பட முடியும்.

3.பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தடுத்துவைக்கப்பட்டு- இதுவரை எந்த வழக்குகளும் பதிவுசெய்யப்படாமல் இருக்கின்ற எல்லாக் கைதிகளையும் பொருத்தமான பிணையில் விடுவிக்க முடியும். பல ஆண்டுகளாக வழக்கு பதிவு செய்யப்படாமல் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்துவைதத்திருப்பது அவர்களின் மனித உரிமைகளை மீறும் செயல்.

4. குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் குற்றப்பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கும் காவல்துறையினருக்கும் அவசர அறிவுறுத்தல்கள் வழங்கப்பட முடியும். கைதிகள் பல ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்ற அடிப்படையில் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்யமுடியும்.

5. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டு, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல், வெறும் குற்றஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே அரசிடம் ஆதாரமாக உள்ள வழக்குகளின் கீழுள்ள கைதிகளை பிணையில் விடுவிக்கமுடியும்.

6. வழக்குகள் பதியப்பட்டு- வேறு ஆதாரங்களும் அரசிடம் இருக்கக்கூடிய வழக்குகளின் கீழுள்ள கைதிகளுக்கு போதுமான சட்ட உதவிகளை வழங்கி முன்மை அடிப்படையில் வழக்கு விசாரணையை முடிக்க நடவடிக்கை எடுக்க முடியும்.

7. தினசரி விசாரணை அடிப்படையில் வழக்கு விசாரணைகளை நடத்துமாறு நீதிச் சேவைகள் ஆணைக்குழு நீதிபதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க முடியும். வழக்கு விசாரணைகள் அநாவசியமாக தாமதமாகும் போது, கைதிகளுக்கு பிணை வழங்கும் தெரிவை நீதிபதிகளுக்கு கொடுக்க வேண்டும்.

தனது யோசனைகளை கருத்தில் கொண்டு ஜனாதிபதி அவசர நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்புவதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சரும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் அனுப்பியுள்ள கடிதத்தில்தெரிவித்துள்ளார்.

கொழும்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம், போகம்பரை உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் சிறைகளில் பல ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட தமிழ்க் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment