கைதிகளின் பெற்றோர் நீதி அமைச்சரின் கூற்றுக்கு மறுப்பறிக்கை!

கைதிகளின் பெற்றோர் நீதி அமைச்சரின் கூற்றுக்கு மறுப்பறிக்கை!

இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்றும் மாறாக கொலை கொள்ளை குற்றம் சாட்டப்பட்டவர்களே இருக்கிறார்கள் என்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை நியாயமற்றது என  உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீண்ட நெடுஞ்சிறை வாழ்வை அனுபவித்து வரும் அரசியல் கைதிகளாகிய எமது பிள்ளைகள் சர்வதேசம், அரசாங்கம், அரச தலைவர்கள், அதிகாரிகள் என அனைத்துத் தரப்பினரிடமும் விடுதலை கூறி இன்று விரக்தியின் விளிம்பின் நிலையை எட்டியுள்ளனர்.

இந்த நிலையிலேதான் அனைத்து இலங்கை அரசியல் கைதிகளும் 12.10.2015 முதல் பொது மன்னிப்பு அல்லது ஏதேனும் ஒரு பொறிமுறை ஊடான உடனடி விடுதலையை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு கவன ஈர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அரசியல் கைதிகளின் அஹிம்சை ரீதியிலான கவனயீர்ப்பு தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது  இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்றும் மாறாக கொலை கொள்ளை குற்றம் சாட்டப்பட்டவர்களே இருக்கிறார்கள் என்றும் சிறு பிள்ளைத்தனமாக தெரிவித்துள்ளார்.

இவர்களின் கருத்து உயிரை பணயம் வைத்து வாழ்வுரிமைக்காக அமைதி வழியில் கவன ஈர்ப்பை மேற்கொள்ளும் எமது உறவுகளை அவமதிப்பதாக உணருகின்றோம்.  மேலும் இந்த நல்லாட்சி தேசிய அரசு எமது பிள்ளைகளின் விடுதலை விவகாரத்தை வெற்று கண்களால் பார்க்கிறதா எனும் வேதனையே மிஞ்சுகின்றது. எவ்வாறாயினும் எமது பிள்ளைகளின் விடுதலைக்காக அனைத்து இன சமூகத்தையும் ஒன்றிணைத்து அதிர்வுள்ள தொடர் அஹிம்சை போராட்டங்களை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்துள்ளோம் என்பதை இவ்விடத்தில் பதிவு செய்கிறோம் என்றுள்ளது.

(யாழ் உதயன்)

Share This Post

Post Comment