தமிழ் கைதிகளுக்கு ஆதரவாக வெளியிலும் போராட்டங்கள்!

தமிழ் கைதிகளுக்கு  ஆதரவாக வெளியிலும் போராட்டங்கள்!

இலங்கை சிறைச்சாலைகளில் விடுதலை கோரி உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் கைதிகளின் போராட்டம் மூன்றாவது நாளாக தொடரும் அதேவேளை, அவர்களுக்கு ஆதரவாக வெளியிலும் போராட்டங்கள் ஆரம்பித்திருக்கின்றன.

 கொழும்பு மகசின் சிறைச்சாலையில் எட்டு பேரின் உடல் நிலை மோசமடைந்துள்ளதையடுத்து, அவர்கள் வைத்திய கவனிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோன்று அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்ற 40 பேரில் இருவரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, அவர்கள் வைத்திய கவனிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அங்கு சென்று திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
தமிழ் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் புதனன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது. இதற்கான அழைப்பை சம உரிமைகள் அமைப்பு விடுததிருந்தது. இதில் இடதுசாரி கட்சி உறுப்பினர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் கைதிகளின் உறவினர்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் எட்டுப்பேர் அடங்கிய குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று கைதிகள் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என கோரும் மகஜர் ஒன்றை அங்கிருந்த அதிகாரிகளிடம் கையளித்துள்ளது.

இந்தக் குழு ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை என இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்களில் ஒருவராகிய மன்னார் பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தர் சகாயம் தெரிவித்தார். இதன் பின்னர் கைதிகளின் உறவினர்கள் மகசின் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு உண்ணாவிரதம் இருப்பவர்களைச் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பியுள்ளனர்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment