எனது கைகளில் இரத்தக் கறை இல்லை – மகிந்தா

எனது கைகளில் இரத்தக் கறை இல்லை – மகிந்தா

தனது கைகளில் இரத்தக்கறையோ, அழுக்கோ இல்லை எனவும், இதனால் எந்தவிதமான விசாரணைகளுக்கும் அச்சமின்றி முகம் கொடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

பாரிய மோசடிகள் மற்றும் இலஞ்ச ஊழலை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளுக்கு கட்டணம் செலுத்தப்படாமை மற்றும் அப்போது பொது வேட்பாளராக போட்டியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விளம்பரத்தை ஒளிபரப்பு செய்யவிடாமல் தடுத்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்காக அவர் இன்று ஆஜரானார்.

இதன்போது அவர் ஊடகங்களிடம் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் நான்கு படைகளினதும், தளபதிகளை அழைத்து விசாரணை செய்கின்றது. அத்துடன், அரசியல் பழிவாங்கல்களையும் மேற்கொள்கின்றது. இது இன்றுடன் நிறைவடையாது. இந்த அரசாங்கம் ஆட்சியமைக்கும் 5 வருடங்களுக்கும் இது தொடரும்.

எங்கள் மீது சேறு பூசும், எங்களை அடக்கும் நடவடிக்கைகளைத் தவிர இந்த அரசாங்கம் கடந்த 9 மாதங்களில் எதனைச் செய்துள்ளது. அவர்களின் குறைகளை மறைப்பதற்காக இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர். இதைத்தான் இந்த அரசாங்கம் செய்கின்றது. எனது கைகளில் இரத்தக்கறையோ, அழுக்கோ இல்லை. எனவே அச்சமின்றி விசாரணைகளுக்கு முகம் கொடுப்பேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

(யாழ் உதயன்)

Share This Post

Post Comment