கைதிகள் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை – சுமந்திரன்

கைதிகள் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை – சுமந்திரன்

தமது விடுதலைக் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதி வழங்கும் வரையில், தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தமிழ் அரசியல் கைதிகள் கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் நிலையில்,இன்று அவர்களை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘நீதி அமைச்சர் சிறைக்கைதிகளுடன் கலந்துரையாடி இந்த வருட இறுதிக்குள் ஒரு முடிவினை எடுப்பதாக உறுதியளித்த போதும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் அதனை ஏற்க மறுத்துள்ளனர்.அத்துடன் இதுகுறித்து ஏனைய பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபடும் மற்றைய கைதிகளிடம் பேசிய பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.

அத்துடன் இவ்வாறான உறுதிகளை நீதியமைச்சர் வழங்காது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்க வேண்டும் என்றும், ஜனாதிபதியிடமிருந்து ஒரு பதில் கிடைக்கும் வரையில் தாம் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்றும் கூறுகின்றார்கள்.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை எதுவித நிபந்தனையும் இன்றி விடுதலைச் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும். விடுதலைப் புலிகளின் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் தங்களை ஏன் விடுதலை செய்யமுடியாது என்றும் அவர்கள் கேட்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் கேர்னல் பதுமன், மற்றும் சர்வதேச பொறுப்பாளர் கே.பி போன்றோர் மீது குற்றச்சாட்டுக்கள் இல்லை என்று கூறும் போது ஏன் இன்னும் தங்களை தடுத்து வைத்துள்ளீர்கள் என்றும் அவர்கள் இந்த அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினர்’ என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

(யாழ் உதயன்)

 

 

Share This Post

Post Comment