மீனவர் போராட்டங்களுக்கு வட மாகாண நா.உறுப்பினர்கள் ஆதரவு!

மீனவர் போராட்டங்களுக்கு வட மாகாண நா.உறுப்பினர்கள் ஆதரவு!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக மீனவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.

வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் கூட்டமொன்று நேற்று வவுனியாவில் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், சார்ள்ஸ் நிர்மலநாதன், ஐ.ம.சு.மு நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் 10 அம்சக் கோரிக்கையை உள்ளடக்கிய மகஜர் ஒன்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் பிரச்சினைக்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினால் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி பாரியளவில் போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் என்பதை எம்.பிக்கள் சார்பில் கூறியிருந்ததாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஏற்கனவே பல தடவைகள் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டதுடன், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடனும் பேசப்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு எதிராக மீனவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்பதை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற இச்சந்திப்பு வெற்றியளித்திருப்பதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சமாசத்தின் தலைவர் நூர் முகமட் ஆலம் தெரிவித்தார்.

இதேவேளை எமது பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளிடம் எமது பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளோம். எமது போராட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

(யாழ் உதயன்)

Share This Post

Post Comment