குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அதிகாரங்கள் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்வைத்த ஆட்சேபணைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் இடம்பெற்றுள்ள பெரும் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு இன்று கூடியபோது, அதன் தலைவர் நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன இந்த முடிவை அறிவித்தார்.
சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு அரசியலமைப்புபடி அமையவில்லை என்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு அதற்கு அதிகாரங்கள் இல்லை என்றும் அந்த ஆணையத்தின் முன்னால் நேற்று ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச தொலைக்காட்சியான சுயாதீன தொலைக்காட்சி சேவையில் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்காக ஒளிபரப்பான தேர்தல் பிரசாரங்களுக்கான பெருந் தொகை பணத்தை செலுத்தத் தவறிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்துகின்றது.
இந்த விசாரணையின்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பிரகாரம் மகிந்த ராஜபக்ஷ அவரது வழக்கறிஞர்களுடன் ஆணையத்தின் முன்னால் நேற்று வியாழக்கிழமை ஆஜரானார்.
இதன்போது ஆட்சேபணையை முன்வைத்த மகிந்த ராஜபக்ஷவின் வழக்கறிஞர், இந்த ஆணைக்குழுவுக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகாரங்கள் இல்லை என்று வாதிட்டார்.
அவ்வாறே, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அழைத்து விசாரிப்பதற்கும் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்றும அவர் ஆட்சேபம் தெரிவித்தார்.
அதனையடுத்து, விசாரணைகளை ஒத்திவைத்த நீதிபதிகள் ஆட்சேபனை தொடர்பான முடிவை இன்று வெள்ளிக்கிழமை அறிவிப்பதாக தெரிவித்திருந்தனர்.
இதன்படி இன்று காலை ஆணைக்குழுவின் அமர்வு கூடியபோது, அதன் தலைவர் நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன, மகிந்த ராஜபக்ஷ தரப்பின் ஆட்சேபணையை நிராகரிப்பதாக அறிவித்தார். அதனையடுத்து, மகிந்த ராஜபக்ஷவின் வாக்குமூலத்தை பதிவுசெய்துகொள்ள ஆணைக்குழு தீர்மானித்தது.
(பிபிசி தமிழோசை)