“மாட்டுக்கறி” …இந்தியாவில் தொடரும் சர்ச்சை!

“மாட்டுக்கறி” …இந்தியாவில் தொடரும் சர்ச்சை!

உண்பது தொடர்பாக மத்தியில் ஆளும் பாஜக தலைவர்களின் கருத்துக்களால் ஏற்படும் சர்ச்சைகள் தொடர்ந்து வலுத்து வருகின்றன. பாரதிய ஜனதாக் கட்சியை சேர்ந்த ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டாரின் மாட்டுக்கறி தொடர்பான கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

“இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழலாம், ஆனால் அவர்கள் மாட்டிறைச்சி உண்பதை கைவிட வேண்டும். மாடு என்பது மக்களின் இறைநம்பிக்கை சார்ந்தது” என ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் மனோகர் லால் கட்டார் தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியை அந்த நாளிதழ் வெளியிட்ட பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த மனோகர் லால் கட்டார், தான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றார். இதனால் யாரேனும் மன வருத்தமடைந்திருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கோர தயாராக உள்ளதாகவும் கூறினார்.

இருந்தபோதும் மாட்டுக்கறி தொடர்பாக ஒரு மாநிலத்தின் முதல்வர் வெளியிட்டிருக்கும் இந்தக் கருத்து பாஜக தலைமையிலான மத்திய அரசின் நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன.

இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, மனோகர் லால் கட்டார் தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என்று குறிப்பிட்டார். மாட்டுக்கறி தொடர்பான பாஜகவின் கொள்கையையோ, மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டையோ அவர் தெரிவிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

மனோகர் லால் கட்டாருக்கு இந்த விவகாரம் தொடர்பில் அறிவுரை வழங்கப்படும் என்று கூறிய வெங்கையா நாயுடு, ஒருவரின் உணவு பழக்கவழக்கம் என்பது ஒவ்வொரு மனிதனின் தனி உரிமை என்பது தான் அரசின் கொள்கை என்றும் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் மாட்டுக்கறி உணவு வைத்திருந்ததாகக் கூறி முஸ்லிம் ஒருவர் தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அரசியல்வாதிகள் பலரும் தெரிவித்திருந்த கருத்துக்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.
பாஜக ஆளும் சில மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்ட சம்பவங்களும் எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு வலு சேர்த்தன.

பாஜகவின் பிராந்திய தலைவர்கள் சிலர் வெளியிட்ட கருத்துக்கள் கடுமையாக இருந்து வந்த சமயத்தில், ஒரு மாநிலத்தின் முதல்வரே தற்போது சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளதால் இந்த விவகாரம் பெரிதாகியுள்ளது.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment