இந்தியாவில் மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவுகளில், மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மேகி நூடுல்ஸை தயாரித்து விற்கும் நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவிலேயே காரீயம் காணப்படுவதாக மூன்று வெவ்வேறு ஆய்வுக் கூடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், பல்வேறு காலகட்டங்களில் தயாரிக்கப்பட்டிருந்த 90 மாதிரிகளில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் வி.எம்.கானடே மற்றும் பீ.பி.கொலாபாவாலா ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு வெளியிட்டிருந்த உத்தரவில் கூறப்பட்டிருந்த அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு, 6 வார காலத்திற்குள் முழுமையான சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளதாக நெஸ்லே நிறுவனத்தின் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனியும் தொடர்ந்து தயாரிக்கப்படவுள்ள மேகி நூடுல்ஸின் மாதிரிகளும், அதே மூன்று ஆய்வுகூடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே விநியோகம் செய்யப்படும் எனவும் நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேமேகி நூடுல்ஸின் தரத்தை கண்டறிவதற்காக புதிய சோதனைகளை மேற்கொள்ள மும்பை நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதியன்று உத்தரவிட்டது. அதேவேளை, மேகி நூடுல்ஸிற்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அப்போது நீதிமன்றம் தெரிவித்தது.
புதிய சோதனைகளில் மேகி நூடுல்ஸ் தரமானது என்பது கண்டறியப்பட்டால், அதன் பின்னர் நெஸ்லே நிறுவனம் தங்களின் நூடுல்ஸ் தயாரிப்புகளை மீண்டும் சந்தைப்படுத்தலாம் எனவும் நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு முன்னர் மேற்கொண்டிருந்த சோதனைகளில், நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட சில வேதிப்பொருட்கள் கூடுதலாக இருப்பதாக கூறப்பட்டது. இதன் விளைவாக இந்தியாவின் பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால், தமது நூடுல்ஸ் பாதுகாப்பானதே என்று நெஸ்லே கூறிவந்தது. ஆனாலும் இந்தியா முழுவதும் நூடுல்ஸ் விற்பனையை விலக்கிக் கொள்வதாகவும் அறிவித்திருந்தது. அரசு விதித்தத் தடையை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் செய்திருந்த முறைப்பாட்டின் விளைவாகவே புதிய சோதனைகளுக்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
(பிபிசி தமிழோசை)