போராட்டத்தை இடைநிறுத்திய கைதிகள் !

போராட்டத்தை இடைநிறுத்திய கைதிகள் !

இலங்கையில் சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வழங்கிய உறுதி மொழியை அடுத்து தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் இன்று சனிக்கிழமை கொழும்பு மகசீன் சிறைச்சாலைக்கு நேரடியாக சென்று கைதிகளை சந்தித்து உரையயாடியதையடுத்தே கைதிகள் உண்ணாவிரதத்தை எதிர்வரும் 7ம் திகதி வரை இடைநிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.

எதிர்கட்சி தலைவருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் , சுமந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரும் மகசீன் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியுடன் தான் மேற்கொண்ட உரையாடலின் போது தனக்கு வழங்கிய பதிலை எதிர்கட்சி தலைவர் விளக்கி கூறியதையடுத்து எதிர்வரும் 7ம் திகதி வரை உண்ணாவிரதத்தை கைவிட கைதிகள் இணக்கம் தெரிவித்திருந்தாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கின்றார்.

கடுமையான குற்றங்களைச் செய்த சில கைதிகளைத் தவிர, ஏனைய அனைத்து அரசியல் கைதிகளையும் எதிர்வரும் நவம்பர் 7ம் திகதிக்கு முன்னதாக விடுவிப்பது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் ஏற்கனவே கூறியிருந்தார்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment