லிபரல்கள் என்.டி.பி உதவியுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது!

லிபரல்கள் என்.டி.பி உதவியுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது!

19.10.2015 நடைபெறவுள்ள கனடியப் பொதுத் தேர்தலில்  லிபரல் கட்சி பெருமளவு ஆசனங்களைக் கைப்பற்றி என்டிபிக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகி விட்டது.

கருத்துக் கணிப்புகளின்படி  நான்கு வாரங்களுக்கு முன்பாக மூன்றாவது இடத்தில் இருந்த யஸ்ரின் ரூடோ படிப்படியாக முன்னேறி முன்னணிக்கு வந்துள்ளார். ஆயினும் 338 தொகுதிகளில் அரைவாசிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் லிபரல்கள் வெல்வது கடினம். மொல் கெயர் தலைமையிலான என்டிபிக் கட்சி பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலும் கியூபெக் மாகாணத்திலும் குறிப்பிடத்தக்க இடங்களில் தனது வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த இரு கட்சிகளும் ஹார்ப்பர் அரசைக் கவிழ்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால் தேர்தலின் பின் கை கோர்ப்பார்கள் என்றே கருதலாம். இரண்டரை மாதங்களுக்கு முன்பாக  ஹார்ப்பரின் பழமைவாதக் கட்சியே மீண்டும் கனடாவில் ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் சொல்லியிருந்தன.

கனடிய வரலாற்றின் மிகச் சிறப்பான பிரதமர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர் பியரே ரூடோ. அவரது காலத்தில் தான் Charter of Rights and Freedom மற்றும் Bilingualism போன்ற சிறப்பு வாய்ந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. வெளிநாட்டவருக்கு கனடியக் கதவுகளைத் திறந்து விட்டவர், சீனாவுடனான நட்புறவை அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸனுக்கு முன்னரே ஏற்படுத்தியவர், கியூபாவுடனான உறவினை அமெரிக்காவை மீறியும் செயற்படுத்தியவர் போன்ற தகமைகளைக் கொண்டவர் முன்னாள் பிரதமர் பியரே ரூடோ! அந்த வகையில் பியரேயின் மகனான யஸ்ரினுக்கு தந்தை வழிச் செல்வாக்கும் கை கொடுப்பதாகவே தெரிகிறது. பியரே ரூடோ கியூபெக்கிலும், அல்பேர்ட்டாவிலும் விரும்பப்படாதவராகவே இருந்துள்ளார்.

ஹார்ப்பரின் ஒன்பது வருட கால ஆட்சி மீண்டும் தொடருவதைக் கனடியர்களில் எழுபது சதவீதமானோர் விரும்புவதாகத் தெரியவில்லை. ஹார்ப்பர் தனது கட்சிக்குள் சர்வாதிகாரி போன்றே தொழிற்படுபவர் என்ற குற்றச்சாட்டு பலமாகவே உள்ளது. Reform கட்சியின் தீவிரவாதக் கொள்கைகள் வெள்ளையரல்லாத குடியேறிகளைப் புறக்கணித்து வந்துள்ளன என்ற விமர்சனம் இருந்திருக்கிறது. ஹார்ப்பரது மூலம்   Reform கட்சி! அந்தக் கட்சியின் கொள்கை வகுப்பாளராக இருந்தவர்.  Reform கட்சியை நிர்மாணித்தவரான மானிங்கை வீழ்த்தி அந்தக் கட்சியின் தலைமைப் பதவியையே கைப்பற்றியவர் ஹார்ப்பர். இன்றும் ஹார்ப்பர் வெள்ளையரல்லாத குடியேறிகள் குறித்து இரட்டை அணுகுமறையைக் கடைப்பிடிப்பதாகவே இன்றைய அவரது அணுகுமுறைகள் சுட்டுகின்றன. இந்த அணுகுமுறை முற்போக்கு பழமைவாதக் கட்சியின் கொள்கைகளுக்கு முரணானவை!

கனடா போன்ற பல்கலாச்சார நாட்டில் அனைத்து இன மத மொழி மக்களையும் அரவணைத்து சமத்துவமாக நடத்த வேண்டிய பாரிய பொறுப்பு அரசு கட்டிலேறும் கட்சிக்கு இருக்க வேண்டும். கனடிய நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தை மீறாத வகையில் பாராளுமன்றில் சட்டங்களை இயற்றி நிறைவேற்றுவதென்பது கனடியப் பிரதமரது மிக முக்கியமான கடமை! அல்லாத பட்சத்தில் அத்தகைய சட்டங்கள் கனடிய உயர் நீதிமன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டுத் தோற்கடிக்கப்படும். அண்மையில் ஹார்ப்பர் அரசு நிறைவேற்றிய சில சட்டங்கள் கனடிய உயர் நீதிமன்றங்களில் பிழையானவை எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன.

கனடிய மக்களில் பெரும்பான்மையோர் இன்றைய அரசின் நடவடிக்கைகளால் அதிருப்தியுற்றுள்ளார்கள். அதன் வெளிப்பாடாக இன்னும் 48 மணித்தியாலங்கள் நேரத்தின் பின்னர் லிபரல்கள், என்டிபியினர் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்த நிலையில் கனடாவில் புதிய ஆட்சி அமையப் போகிறது என ‘நாளை’ எதிர்வு கூறுகிறது.

Share This Post

Post Comment