இலங்கையில் கடந்த 2010-ம் ஆண்டில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அவரது மனைவி தாக்கல் செய்திருந்த மனுவில் பிரதிவாதிகளாக இராணுவத் தளபதியையும் இராணுவ புலனாய்வுப் பிரிவுத் தலைவரையும் சேர்ப்பதற்கு நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தங்களது வேண்டுகோளை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார். பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, அவர் காணாமல்போன சம்பவத்துடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவு தொடர்புபட்டுள்ளதாக அறியமுடிவதாகவும், அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இராணுவத் தளபதியையும் புலனாய்வுப் பிரிவுத் தலைவரையும் பிரதிவாதிகளாக சேர்ப்பதற்கு அனுமதி அளிக்குமாறும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
அந்த வேண்டுகோளை ஏற்ற நீதிபதிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மனுவில் பிரதிவாதிகளாக சேர்ப்பதற்கு அனுமதி வழங்கினார். இதன்படி, இம்மாதம் 30 திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு இராணுவ தளபதிக்கும் புலனாய்வு பிரிவின் தலைவருக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காணாமல்போன பிரகீத் எக்னெலிகொடவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறுகோரி அவரது மனைவி 2010 ஆண்டு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(பிபிசி தமிழோசை)