இலங்கை தொடர்பான ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிராகரிக்குமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் சில நடத்திவரும் கூட்டமொன்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.
ஜெனீவா தீர்மானம் தொடர்பில், ஆளுங்கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.
இந்த நிலையில் அந்தக் கட்சியை சேர்ந்த குமார் வெல்கம, பந்துல குணவர்தன, விதுர விக்ரமநாயக்க, நாமல் ராஜபக்ஷ, ரஞ்சித் சொய்சா, டலஸ் அழஹப்பெரும, மகிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் பலர் இந்த எதிர்ப்புக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, பிவித்துரு ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
அங்கு உரையாற்றிய பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, ஜெனீவா தீர்மானம் சம்பந்தமாக அரசாங்கம் இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவு படுத்தவில்லை என்று கூறினார்.
அந்தத் தீர்மானத்துடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் இதுவரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஜெனீவா தீர்மானத்தில் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் உள்ள காரணத்தினாலேயே அரசாங்கம் அதனை மறைத்து வருவதாகவும் உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தின் மூலம் நாட்டின் தேசியப் பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் அதிகாரத்தை வெளிநாடுகளுக்கு வழங்கியுள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
(பிபிசி தமிழோசை)