-‘பதிவுகள்’ வ.ந.கிரிதரன்-
திரு.வெங்கட் சாமிநாதன் மறைந்தார். தமிழ்க் கலை, இலக்கிய உலகின் தவிர்க்க முடியாததோர் ஆளுமை சரிந்தது!
தொடர்ந்து அதிர்ச்சியான இழப்புச் செய்திகளாகவே வருகின்றன. தமிழ்க்கலை, இலக்கிய உலகில் முக்கிய ஆளுமைகளிலொருவரான திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள் மறைந்தாரென்ற செய்தியினை முகநூலில் முகநூல் நண்பர்களிலொருவரும், எழுத்தாளருமான அண்ணா கண்ணன் அவர்கள் பகிர்ந்திருந்தார்.
கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக எழுதி வந்தவர் வெங்கட் சாமிநாதன் அவர்கள். எதையும் வெளிப்படையாக, தர்க்கரீதியாக வெளிப்படுத்தி எழுதும் தன்மை வாய்ந்தது அவர்தம் எழுத்து. அவரது கருத்துகளுடன் முரண்பட்டவர்கள் கூட அவரது பங்களிப்பினை, ஆளுமையினை மதிப்பார்கள்.
அவரது மறைவு பற்றிய செய்தி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மிகுந்த பேரிழப்பே. கடந்த பல வருடங்களாகப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்குத் தன் ஆக்கங்களைத் தொடர்ச்சியாக ‘வெங்கட் சாமிநாதன் பக்கம்’ என்னும் பகுதிக்கு அனுப்பி வந்தவர் வெ.சா. அவர்கள். படைப்புகள் வெளிவரத்தாமதமானால் சிறு பிள்ளைபோல் தாமதத்துக்குக் காரணம் கேட்டு மின்னஞ்சல்களை அனுப்புவார்.
ஒரு சமயம் அவர் அனுப்பிய படைப்புகள் சிலவற்றை மின்னஞ்சல் ‘ஸ்பாம் ஃபோல்ட’ருக்குள் போட்டு விட்டது. நானும் கவனிக்கவில்லை. அதுபற்றி அவர் எழுதிய மின்னஞ்சல் எவ்வளவுதூரம் அவர் ‘பதிவுகள்’ இணைய இதழ் மீது அக்கறை வைத்திருக்கின்றார் என்பதைக் காட்டும்.
திரு. வெ.சா. அவர்கள் அண்மையில் மறைந்த கவிஞர் திருமாவளவன் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். திருமாவளவனின் உடல் நிலை பற்றி அவர் எழுதிய மின்னஞ்சல்கள் சிலவற்றையும், பதிவுகள் இதழுக்கு அனுப்பிய படைப்புகள் பற்றிய அவரது மின்னஞ்சல்கள் சிலவற்றையும் ஒரு பதிவுக்காக இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.
திரு.வெ.சா அவர்கள் கனடா வந்திருந்தபொழுது நான் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. அது பற்றி அவர் அடிக்கடி மின்னஞ்சல்களில் குறிப்பிட்டு வருந்தியிருப்பார். அவ்விதமானதொரு மின்னஞ்சலில் அவர் “மறுபடியும் தங்கள் அன்புக்கு நன்றி. கனடா வந்தபோது தங்களுடன் சந்திப்பு நிகழவில்லையே என்ற வருத்தம் இப்போது மேலும் அதிகமாகிறது. இனி அந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை” என்று எழுதியிருந்தார். இப்பொழுது அதனை நினைத்தால் சிறிது வருத்தமாகவுள்ளது.
பொதுவாகக் கனடாவுக்கு வரும் பல இலக்கிய ஆளுமைகளை அழைத்திருக்கும் அமைப்புகளுடன் செலவழிப்பதிற்கே அவர்களது நேரம் சரியாகவிருக்கும். இவ்விதமான சூழ்நிலையில் நானும் அவர்களைச் சந்திக்க முயற்சி எடுப்பதில்லை. உண்மையில் நான் கனடா வந்த கலை, இலக்கிய ஆளுமைகளில் ஒரு சிலரைத்தான் தனிப்பட்டரீதியில் சந்தித்து , நீண்ட நேரம் உரையாடியிருக்கின்றேன். எழுத்தாளர் எஸ்.பொ, எழுத்தாளர் சோமகாந்தன், எழுத்தாளர் ‘நந்தலாலா’ ஜோதிக்குமார் , கலை, இலக்கிய விமர்சகர் யமுனா ராஜேந்திரன் மற்றும் ‘உயிர்நிழல்’ கலைச்செல்வன்.
வேறு பலரை அவர்களுடனான சந்திப்புகளில் கூட்டத்திலொருவனாகக் கலந்து, அவர்தம் உரைகளைச் செவிமடுத்திருக்கின்றேன். ஆனால் தனிப்படச் சந்தித்ததில்லை. எழுத்தாளர் சுந்தர ராமசாமி வந்திருந்தபொழுது அவருடன் நடைபெற்ற கலந்துரையாலின் இடைவேளையொன்றில் அவருடன் சிறிது நேரம் உரையாடியிருக்கின்றேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்தாளர்கள் பலருடன் நான் நேரில் சந்தித்திருக்காவிட்டாலும் இணையத்தினூடு தொடர்புகளைப்பேணி வருகிறேன்.
திரு வெ.சா. அவர்களை நேரில் சந்தித்திருக்காவிட்டாலும், இணையத்தின் வாயிலாக, அவரது படைப்புகள் வாயிலாக அவருடன் தொடர்புகளைப் பேணி வந்திருக்கின்றேன். அவரது ஐம்பதாண்டு கலை, இலக்கியப்பணியினைக்கெளரவிக்கும் பொருட்டு தொகுப்பு நூலொன்று வெளிவந்துள்ளது.
‘வெங்கட் சாமிநாதன்’: வாதங்களும் விவாதங்களும்’ என்ற அந்தத் தொகுப்பு நூலினை எழுத்தாளர்கள் பா.அகிலன், திலீப்குமார் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் சந்தியா பதிப்பகம் வாயிலாக 2010இல் வெளியிட்டுள்ளார்கள். மிகவும் நேர்த்தியான வடிவமைப்பில், தடித்த மட்டையுடன் வெளியான அந்த நூலில் கலை, இலக்கிய ஆளுமைகள் பலரின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. எனது கட்டுரையான ‘அறிவுத்தாகமெடுத்து அலையும் வெங்கட்சாமிநாதனும் அவரது கலை ,மற்றும் தத்துவியற் பார்வைகளும்’ என்றொரு நீண்டதொரு கட்டுரையினை என் பங்களிப்பாக அதில் எழுதியிருந்தேன். அதன் மூலமும், பதிவுகளுக்கு அவர் அனுப்பும் மின்னஞ்சல்கள் மூலமும் அவரை நேரில் சந்தித்தது போன்றதொரு திருப்தி எனக்குண்டு.
இறுதியாக அவர் அக்டோபர் 18, 2015 அன்று கூட ஒரு நேர்காணலை மூன்று பகுதிகளாக அனுப்பியிருந்தார். அந்த மூன்று பகுதிகளும் ஒழுங்காக வராததால், இன்றுதான் அவரிடம் நேர்காணலை வழக்கம் போல் பகுதி, பகுதியாக அனுப்புமாறு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அவரிடமிருந்து பதிலை எதிர்பார்த்திருந்த சமயத்தில் அவரது மறைவு பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
திரு. வெங்கட் சாமிநாதனின் இழப்பு தமிழ்க் கலை, இலக்கியத்தைப்பொறுத்தவரையில் மாபெரும் பேரிழப்பு.
‘பதிவுகள்’ இணைய இதழினைப்பொறுத்தவரையில் ‘பதிவுகள்’ இணைய இதழுக்குத் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாகத் தன் படைப்புகள் மூலம் பங்களித்து வந்தவர் அவரென்பதால் தனிப்பட்டரீதியிலும் மிகுந்த பேரிழப்பே. தன் படைப்புகள் மூலம் அவர் தமிழ்க்கலை, இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத ஆளுமைகளிலொருவராகத் தடம் பதித்துச்சென்றிருக்கும் வெ.சா. அவர்களின் மறைவினையொட்டிய இத்துயரகரமான தருணத்தில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், நண்பர்கள் உறவினர்கள் மற்றும் கலை, இலக்கிய உலகினைச்சேர்ந்த அனைவருக்கும் ‘பதிவுகள்’ தன் ஆழ்ந்த அஞ்சலியினைச் செலுத்திக்கொள்கின்றது.
(கிரிதரனது முகநூலில்)