இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் அதிக அதிகாரங்கள் ?

இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் அதிக அதிகாரங்கள் ?

இந்திய மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும்விட அதிக அளவு அதிகாரங்களை இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குவதற்கேற்ற வகையில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் பிரேரிக்கப்பட்டதாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முன்னாள் இந்திய நிதியமைச்சரும், காங்கிஸ் கட்சியின் முக்கியஸ்தருமாகிய ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வருகை தந்திருந்த சிதம்பரம், புதனன்று யாழ்ப்பாணத்திற்குச் சென்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போதே வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்குவது பற்றிய விடயத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கூறியுள்ளார்.

இந்தத் தகவலை முதலமைச்சர் விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆயினும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் குறைந்த அளவிலான அதிகாரங்களே வழங்கப்பட்டதாகவும், வழங்கப்பட்ட அதிகாரங்களிலும் பல அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொண்டுவிட்டது என்றும் முன்னாள் இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் தான் தெரிவித்ததாகவும் விக்னேஸ்வரன் கூறினார்.

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட பிரேரரணையின் பின்னர், இலங்கையில் மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும இடையில் நல்லுறவு ஏற்படும் என்றும், அதன் ஊடாகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்வதற்கும் வழி பிறக்கும் என்றும் சிதம்பரம் நம்பிக்கை வெளியிட்டதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment