ஜஸ்ரின் ரூடோவுக்கு அமெரிக்கா அழுத்தம்!

ஜஸ்ரின் ரூடோவுக்கு அமெரிக்கா அழுத்தம்!

இராக்கிலும், சிரியாவிலும் இஸ்லாமிய அரசுக்கு எதிரான போரில் கனடா தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டுமென வாஷிங்டன் விரும்புகின்றது.

ஆனால் கனடாவின் எதிர்காலப் பிரதமர் தனது முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டில், குறிப்பிட்ட போரிலான வான்வெளித் தாக்குதல்களை விலக்கிக் கொள்ளப் போவதான தனது தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்றப் போவதாகக் கூறியுள்ளார். இதனை அவர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு செவ்வாய் இரவு தொலைபேசியில் தெளிவுபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற அவகாசம் அளிக்காமலே சர்வதேச சவால்கள்; ஜஸ்ரின் ரூடோவுக்கு பிரச்சனையாக இருக்கும் என்பதற்குக் கட்டியமாக இது உள்ளது.

மேலும், வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலாளர் ஜோஷ் ஏணேஸ்ற், அமெரிக்க ஜனாதிபதி, ரூடோவுடன் இணைந்து செயற்படக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கின்றார் எனக் கூறியுள்ளார். ஆனாலும் ஒபாமாவின் நிகழ்ச்சி நிரலை வலியுறுத்த அவர் தவறவில்லை.  பசுபிக் பிராந்திய நாடுகளின் ஒப்பந்தத்துக்கு ஆதரவளிப்பது, ‘ஐஎஸ்எஸ்’  உக்கு எதிரான தாக்குதல்கள், காலநிலை மாற்றம்  என்பவை இந் நிரலில் உள்ளடங்கும்.

அமெரிக்காவுடன் சிறந்த உறவைப் பேணுவதென வாக்குறுதி அளித்துள்ள ரூடோவுக்கு இது ஒரு சிக்கலான சவாலாக உள்ளது. ஈராக்கில் கனடியத் துருப்புக்களின் பயிற்சியைத் தொடரவுள்ளதாக வாக்களித்துள் ரூடோ, சில சந்தர்ப்பங்களில் இதற்கு மாறுபடும் வகையில் கருத்துத் தெரிவிப்பதாகத் தோன்றுகின்றது.

அரசியல் ரீதியாக ரூடோ முற்று முழுதாகத் தனது முரண்பாடான வாக்குறுதிகளிலிருந்து விலகமுடியாத நிலையில் உள்ளதுடன் அமரிக்காவுடனான நல்லுறவைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளார்.

Share This Post

Post Comment