என்.டி.பிக் கட்சித் தலைவர் மல் கெயரினதும் அக்கட்சியினதும் எதிர்காலம் என்ன ?

என்.டி.பிக் கட்சித் தலைவர் மல் கெயரினதும் அக்கட்சியினதும் எதிர்காலம் என்ன ?

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சி, கடுமையான தோல்வியைத் தழுவிய பின்னரும், கட்சியின் தலைவராகத் தோமஸ் மல்கெயர் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கட்சியின் பல மட்டங்களிலும் நிலவுகிறது. கட்சியின் எதிர்காலத்தையும் அதன் முன்னுள்ள தேர்வுகளையும் தீவிரப் பரிசீலனைக்கு உட்படுத்தி வழிநடத்தும் பொறுப்பை அவரிடமே ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிகிறது.

‘இயர்ன்ஸ்க்ளிஃப்’ செயல்திட்டக் குழுவில் முதன்மையானவராகப் பணியாற்றியவரும் என்.டி.பிக் கட்சியின் தேசிய இயக்குனராக முன்னர் செயலாற்றியவருமான் ராபின் சியர்ஸ் இது குறித்து கூறுகையில், “தலைமைப் பொறுப்பில் இருந்து அவர் விலக்கப்படமாட்டார். அம்முயற்சியில் ஈடுபடுபவர் எவராக இருந்தாலும் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும்” என்று தெரிவித்தார். கட்சிக்கு நெருக்கமான பன்னிருவர் குழுவை சேர்ந்தவர்களின் முடிவை எதிரொலிப்பதாகவே அவரது கருத்தும் இருந்தது.

இந்நிலையில், மல்கெயர் செவ்வாயன்று பத்திரிகையாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்தார். வெற்றிபெற்ற மற்றும் தோல்வியடைந்த என்.டி பி எம்.பி க்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடிக் கொண்டிருக்கிறார் என்ற தகவலை மட்டுமே பெறமுடிந்தது.

மல்கெயர் வரும் நாட்களில் புதிய ஜனநாயகக் கட்சி மற்றும் முற்போக்கு இயக்கத்திலுள்ள முக்கிய பிரமுகர்களையும், வட்டாரத் தலைவர்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கட்சியில் சிலர் கருதுவதாகவும் தெரிகிறது.

மல்கெயர் தலைவர் பொறுப்பில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த ஒன்ராரியோ என்.டி.பித் தலைவர் ஆன்ட்ரியா ஹாவார்த்துடனும் மல்கெயர் தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரியவில்லை.

குவீன்ஸ் பார்க்கில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கட்சி சந்தித்துள்ள தோல்வி பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக ஒப்புக்கொண்ட ஹாவார்த், “தற்போதுள்ள நிலையில் இருந்து கட்சியை வலுப்படுத்தி, வளர்த்துச் செல்லும் பணியைச் சிறப்பாகச் செய்யக்கூடியவர் அவர்.” என்றும் கருத்து தெரிவித்தார்.

வடக்கு ஒன்ராரியோவில் ‘டிம்மின்ஸ் ஜேம்ஸ் பே’ – வை வென்று மீண்டும் எம்பி – யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள என்.டி.பி -யின் சார்லி ஆங்கஸ், தாம் செவ்வாயன்று மின்னஞ்சல் மூலம் மல்கெயருடன் முதற் கட்டக் கலந்துரையாடல் செய்ததாகத் தெரிவித்தார். மேலும் அவர், “கட்சி ஆதரவாளர் மாநாட்டைக் கூட்டும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, “இத்தோல்வியில் இருந்து நாம் படிப்பினைகள் பெற்றுக் கொள்ளப் போவது வெளிப்படை. மாற்றங்கள் நிகழப் போகின்றன என்பதும் வெளிப்படை” என்பதை மட்டும் சொல்லப் போகிறேன். நாம் புதிய சூழலை எதிர்கொண்டிருக்கிறோம். சில இடங்களில் தோற்றிருக்கிறோம். சில புதிய இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறோம். இன்னும் 18 மாதங்களில் இருந்து 4 வருடங்களுக்குள் நாம் மீண்டும் தயாராவதற்கு மல்கெயர் நமக்கு எப்படி வழிகாட்டப்போகிறார் என்பதே கேள்வி,” என்றும் கூறினார்.

இச்சவாலைச் சந்திப்பதற்கு மல்கேர் தயாராக இருக்கிறாரா, எவ்வளவு காலம் எடுத்துக் கொள்வார் என்பது இதுவரையில் தெரியவில்லை. ஆனால், கடந்த காலங்களில், இதுபோன்றச் சவால்களை அவர் எதிர்கொண்ட விதங்களைக் கொண்டு பார்த்தோமானால், இறுதி முடிவு அவருடைய மனைவியும் நெருங்கிய ஆலோசகருமான காதரின் பி. மல்கெயர், அவர்களது மகன்களான மேத்யூ மற்றும் கிரெகரி ஆகியோருடனான அவர் கலந்து ஆலோசிப்பதைப் பொறுத்தே அமையும் என்பது தெளிவு.

முன்னர் யாக் லேய்ரனுக்குச் சுற்றுச்சூழல் கொள்கை ஆலோசகராக இருந்தவரும் மல்கெயரின் தலைமையை வலியுறுத்திய பிரச்சார இயக்கத்தில் பங்குபெற்றவரும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியருமான மிகேல் பேயர்ஸ் இது குறித்து கூறுகையில், “மல்கெயர் வளைந்து கொடுத்து தாக்குப்பிடித்து நிற்பதில் வல்லவர் என்பதை நன்கு அறிவேன். மேலும், அரசியலில் அவர் தன்னலம் பார்ப்பவர் இல்லை. பரந்துபட்ட நலனையே பார்ப்பவர். ஆகையால், தலைமையில் தொடர்ந்து இருப்பது, கட்சிக்கும் நாட்டிற்கும் நலன் பயப்பதாக இருக்கும் என்று கருதினால் மட்டுமே அதை தேர்வு செய்வார். தனது சொந்த உணர்ச்சிகளைத் தள்ளிவைத்துவிட்டு முடிவெடுக்கும் திறன் அவருக்கு உண்டு,” என்று தெரிவித்தார்.

தாராளவாதக் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றிருக்கும் நிலையில், மீண்டும் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் கூடியவரையில் இல்லை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிவதால், இது விடயத்தில் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை என்பதே கட்சியினரிடத்தில் ஒருமித்தக் கருத்தாக உள்ளது.

என்.டி.பி – யின் தோல்விக்குக் காரணம் என்ன என்பது பற்றிய அலசல் மேலும் சிறிது காலத்திற்குத் தொடரும். ஆனால், குறைந்தது தமது வெளிப்படையான பேச்சுக்களிலாவது, மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்ற ஒருமித்த கருத்தும் கட்சியில் நிலவுகிறது.

மீண்டும் எம்.பி – யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிட்டிஷ் கொலம்பியா என்.டி.பி வேட்பாளர் நேதன் கலன், “தேர்தல் பிரச்சாரம் பெரும்பாலும் மாற்றம் பற்றியதாகவே இருந்தது. நாங்கள் முன்வைத்த மாற்றம் நுட்பமாகப் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாக இருந்தது. மக்கள் எதிர்பார்த்ததோ வெட்டு ஒன்று, துண்டு ஒன்று என்ற வகையிலான பட்டவர்த்தனமான மாற்றத்தை,” என்றார்.

பர்தா அணிவதற்குத் தடை என்பதற்கு எதிரான என்.டி.பி யின் நிலைப்பாடு அக்கட்சியின் தேர்தல் தலைவிதியின் பேரளவைத் தீர்மானிப்பதாக இருந்தது. ஆனால், ஜஸ்டின் ரூடோ பற்றாக்குறையான நிதிநிலை அறிக்கையை முன்வைத்தற்கு மக்கள் சாதகமாக செவிசாய்த்துக் கொண்டிருந்த நிலையில், சமநிலையான நிதிநிலை அறிக்கையை வாக்களித்து, தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக அதைக் கொண்டு சென்றது, பெரும் தவறான உத்தியாக அமைந்துவிட்டது என்றும் பலர் கருதுகின்றனர்.

மிகை எதிர் பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை என்ற பிரச்சாரத்தின் தாக்கம் குறித்து, தமது பி.சியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.டி.பி எம்.பி பீற்றர் ஜுலியனிடம் கருத்துக் கேட்டபோது, “முற்போக்கு அரசியலைச் சாதாரணர்கள் வரையறுப்பதை இனியும் அனுமதிப்பதற்கில்லை என்பதை நாம் உறுதி செய்தாக வேண்டும்,” என்றார்.

1980 – களில் என்.டி.பி -யின் இடதுசாரி அணியில் பங்குபெற்றிருந்த ஜுடி ரெபிக், பருவநிலை மாற்றம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், இனுயுற் – மெட்டிஸ் போன்ற ஆதிக்குடி  (First Nations) மக்களுக்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகளை மீளுருவாக்கம் செய்வது போன்ற பிரச்சினைகளில் மல்கெயர் உறுதியான நிலைப்பாடுகள் உடையவர் என்பதால், இப்பிரச்சினைகளில் மக்களவையில் தாராளவாதிகளுக்கு அழுத்தங்கள் தரும் பணியை மல்கெயர் ஆற்றமுடியும் என்றும், அதேசமயத்தில் கட்சி தன்னை மீண்டும் பலப்படுத்திக்கொள்வதில் கவனத்தைக் குவிக்க முடியும் என்றும் கூறினார்.

“அப்பிரச்சினைகளில் அவர் மிகுந்த ஈடுபாடுடையவர். ஆகையால், தனிநபர் ஆளுமை சார்ந்த தலைமைப் போட்டியைத் தவிர்த்துவிட்டு, அத்தகைய முக்கியத்துவமுள்ள கொள்கை சார்ந்த விவாதங்களில் கவனம் செலுத்துவது, என்.டி.பி தான் யாருக்காக நிற்கிறது என்பதையும் என்னவாக இருக்க விரும்புகிறது என்பதையும் காட்டுவதாக இருக்கும்,” என்றும் கூறினார்.

– ராப் ஃபெர்குஸான் ‘குளோப் அன்ட் மெயில்’ ஏட்டில் (தமிழில்:வளர்மதி)

Share This Post

Post Comment