அகதிகளுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூடோ விரைந்து செயற்பட வேண்டும்!

அகதிகளுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூடோ விரைந்து செயற்பட வேண்டும்!

அகதிகளுக்கான வாக்குறுதிகளைக் காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற ரூடோ விரைந்து செயற்பட வேண்டும். 25,000 சிரிய அகதிகளை ஜனவரியில் குடியமர்த்துவது புதிய அரசுக்கு மிகக் கடினமாக இருந்தாலும் அது இயலாத ஒன்றல்ல.

2ம் உலக யுத்தத்தின் பின்னரான மிகப்பெரிய அகதிகள் பிரச்சனையை உலகம் எதிர்கொள்ள முடியாது தவிக்கும் இந்தச் சமயத்தில், ஜஸ்ரின் ரூடோ, வருட முடிவுற்குள் 25,000 சிரியன் அகதிகளைக் கனடாவில் குடியேற்றுவேன் என்ற தனது தேர்தல் வாக்குறதியைக் காப்பாற்றும் கடினமான பணியை எதிர்கொள்கின்றார்.

சிரியா எல்லையில் அகதிச் சிறுவன் அலனின் உடல் கரையொதுங்கக் கண்ட பரிதாபத்தில் அகதிகளுக்கான உதவி மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை செப்டெம்பரில் கனடாவில் மேலோங்கியது. செப்டெம்பா 20 அன்று, தனது அரசு, சிரிய அகதிகளை வான்வழியாக்க் கனடாவுக்கு வரவழைப்பதைக் கருத்தில் கொள்ளும் என ஜஸ்ரின் கூறியமையும் குறிப்பிடத்தக்கது.

தங்களது தேர்தல் வாக்குறுதியை லிபரல் அரசு நிறைவேற்றுமா என வினவப்பட்டபோது, காலக்கெடு பற்றிக் குறிப்பிடாவிடினும், 25,000 சிரியன் அரசியல் அடைக்கலம் கோருவோரைத் தமது அரசு குடியமர்த்துவது நடக்கும் என லிபரல் கட்சியினர் பதிலளித்திருந்தனர்.

இதற்கு பாரிய அளவு மனிதவளம் கொண்ட பல்முக அணுகுமுறை அவசியமாகும். அகதிகள் குடியிருப்புக்காக இராணுவத் தளங்களை ஏற்பாடு செய்வதில் படையினரின் வளத்தையும் பயன்படுத்தல் இதிலடங்கும் என, கனடா குடிவரவு குடியமர்வு துறை அலயன்ஸ் என்ற அமைப்பின் தாபகரும், தலைவருமான கிறிஸ் பிரியன்சன் தெரிவித்தார்.

கடந்த இலையுதிர் காலத்தின்போது கனடா மக்கள் சிரியன் அகதிகளின் துயர்துடைக்க விரைந்து செயற்பட்டிருந்தனர் எனக் கூறிய மாக்கம்-தோண்கில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்கலம், லிபரல் கட்சி நாட்டிலும், உலகிலும் ஒரு நம்பிக்கையான பங்காளியாக நடந்துகொள்ளும் எனவும், சிரியன் அகதிகளுக்கு உதவுவதில் நாம் பின்நிற்க மாட்டோம் எனக் கூறினார்.

புதிய அரசு, அகதிகள் குடியமர்வில் இன்னமும் தீவிரமாகச் செயற்படவேண்டும். பிரதமராகவிருக்கும் ரூடோவுக்கு விரைந்து செயற்படுவதற்கான அரசியல் விருப்புறுதி உள்ளதென்ற நம்பிக்கை எனக்குண்டு! எனக் கனடா அகதிகள் நலன்புரி தாபனமொன்றின் தலைவர் ‘பிரியன் டைக்’ தெரிவித்தார்.

இருப்பினும், சிரியன் அகதிகளுக்கான உடனடித் திட்டங்கள் தவிர, லிபரல் கட்சியினர் தமது குடிவரவு, அகதிகள் பிரச்சனைகள் சம்பந்தமாகத் தமது தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட விஷயங்கள் வேறும் பலவுண்டு. இவை நிறைவேற்றப்பட்டால் புதிதாகக் குடிவருபவர்கள் சம்பந்தமான அரசின் கொள்கைகளில் பாரிய மாற்றம் ஏற்படும்.

மனிதாபிமானம், அகதிகள் பாதுகாப்பு என்பன சம்பந்தமான விஷயங்களில் தலைமைத்துவம் வகிக்கும் அந்தக் கனடாவையே நாம் நேசிக்கின்றோம்! புதிய அரசு அந்தக் கனடாவை மீண்டும் தாபிக்கும் என நம்புகின்றோம், என அகதிகள் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மிச்சேல் கோல்ட்பேக் கூறினார்.

எதிர்க்கட்சியினர் தாம் வாக்களித்தவற்றை நிறைவேற்றாமல் போன பல சந்தர்ப்பங்களை நான் நன்கு அறிவேன், எனக் கூறிய கனடியன் அகதிகள் கவுன்சிலைச் சேர்ந்த ஜனற் டென்ச், தாம் எதையுமே நடக்கும் என்று மட்டுமே நம்பி இருப்பதில்லை என்றும் தெரிவித்தார்.

Share This Post

Post Comment