
இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக நாடெங்கிலும் கலந்துரையாடல் மையங்களை உருவாக்கவுள்ளதாக தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் கூறியிருக்கிறார்.
நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் அமையவுள்ள இந்த கலந்துரையாடல் மையங்களில் சமூக மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் தீர்மானித்தார்.
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானத்தின் தொடர்ச்சியாக இலங்கை வந்துள்ள ஐநா பிரதிநிதிகள் பிரதமர், வெளியுறவு அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.
நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பதில் ஐநா வழங்கக்கூடிய உதவிகள் தொடர்பில் தம்முடன் பேச்சு நடத்தப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.
கடந்த காலங்களில் அரசியல் ரீதியில் உயர்மட்டங்களில் ஏற்பட்ட இணக்கப்பாடுகள் காலப்போக்கில் தோல்வியடைந்துவிட்ட அனுபவங்கள் இலங்கைக்கு உள்ளதாகவும் கூறிய மனோ கணேசன், சமூகங்களின் அடிமட்டத்தில் சரியான இணக்கப்பாடுகள் எட்டப்படாமையே அதற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.
2002-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம் பின்னர் முறிவடைந்தமைக்கு ‘மேல்பட்ட பேச்சுக்களுக்கு இணையாக அடிமட்டத்தில் சாதாரண மக்கள் மத்தியில் புரிந்துணர்வு ஏற்படாமையே காரணம் ‘ என்றும் அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.
அப்படியான நிலைமை மீண்டும் ஏற்படாத வண்ணம் சமூக மட்டங்களில் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக ஐநா பிரதிநிதிகள் கூறியதாக மனோ கணேசன் தெரிவித்தார்.
(பிபிசி தமிழோசை)