புதிய சி-51 சட்டவாக்கத்தின் கீழான, கனடியப் பாதுகாப்பு உளவுச் சேவையின் (CSIS) செயற்பாடுகள், பொறுப்புக்கூறல் சம்பந்தமான சந்தேகங்களை எழுப்புகின்றன.
அமெரிக்க சிஐஏ, பிரித்தானியாவின் எம்16 போன்ற ’நம்பிக்கைக்குரிய நண்பர்கள்’ உடன், நாட்டுக்கு எதிரான ஆபத்தை முறியடிக்க, கடல் கடந்த செயற்பாடுகளில் சிஎஸ்ஐஎஸ் இணைந்து இயங்கும் என அரச உள்ளகக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. இச் செயற்பாடுகள் பொறுப்புக்கூறல் சம்பந்தமான சந்தேகங்களை இது எழுப்புகின்றது.
சி-51 சட்டவாக்கம், வெளிநாடுகளில் ’தடங்கல்’ கூட்டு முயற்சிகளில் வெளிநாட்டுச் சட்டங்களுக்கு எதிரான இரகசியச் செயற்பாடுகளிற்கூட ஈடுபடுவதற்கு புலனாய்வுக்கு முன்னர் இல்லாத அதிகாரத்தை அளிக்கின்றது என அரச குறிப்புக்கள் கூறுகின்றன.
அனேகமாக சர்வதேசரீதியில் சிஎஸ்ஐஎஸ் தனித்துச் செயற்படுவதற்கு முன்னர், உள்ளக நீதித்துறையுடனோ, நம்பிக்கைவாய்ந்த நண்பர்களுடனோ இணைந்து செயற்படுவதற்கான சாத்தியத்தையே தேடும் என அக் குறிப்புக்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில், சிஎஸ்ஐஎஸ், வெளிநாடுகளில் உள்ள ஆபத்தை முறியடிக்கவோ, நண்பர்களுக்கு உதவி வழங்கவோ கூட்டுச்செயற்பாடுகிளில் இணையும்படி அழைக்கப்பட்டிருந்தாலும், அவ்வாறு செய்வதற்கு அதற்கு அதிகாரம் இருக்கவில்லை, என்றும் கூறப்படுகின்றது.
சிஎஸ்ஐஎஸ் பெற்றுள்ள புதிய ’ஆபத்தை முறியடிக்கும்’ அதிகாரம் யூன் மாதத்தில் அரச அங்கீகாரம் பெற்ற சட்டவாக்கத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய அம்சமாக இருக்கின்றது. அதிகாரமற்ற வகையில் இணையத்தளங்களில் கைவைப்பது, விமான முற்பதிவுகளை இல்லாமற் செய்வது திட்டங்களைச் சீர்குலைப்பது என்பனவற்றையும் இவ்வதிகாரம் உள்ளடக்கும் வாய்ப்பு இருக்கிறது.