மொழிப் பிரச்சினையே போர் ஏற்படக் காரணம் – மனோ கணேசன்

மொழிப் பிரச்சினையே போர் ஏற்படக் காரணம் – மனோ கணேசன்

நாட்டில் கடந்த மூன்று தசாப்தகாலமாக புரையோடிப் போயிருந்த போருக்குப் மொழிப்பிரச்சினையே பிரதான காரணமாக அமைந்ததாகவும், இதனை அப்போதே பேசித் தீர்த்துக்கொண்டிருக்க முடியுமென்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு இராஜகிரியவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மொழிப் பயிற்சியை நிறைவுசெய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலை கல்வியை முடித்த சிங்கள மாணவர்கள் தமிழையும், தமிழ் மாணவர்கள் சிங்களத்தையும் கற்றுக் கொள்வதற்கு பல திட்டங்களை தமது அமைச்சினூடாக முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இதனூடாக தெற்கில் வசிப்பவர் வடக்கிற்கு சென்றும் வடக்கில் வசிப்பவர் தெற்குக்கு வந்தும் தத்தம் அலுவலக கடமைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மொழித்திறன் அபிவிருத்தி செய்யப்படவேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், மூவின மக்களையும் ஒன்றிணைந்து ஒரு இணைப்பு பாலமாகக் கொண்டுசெல்வதற்கும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், புனர்வாழ்வு பெற்ற விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள், இராணுவத்தினர் ஆகியோர் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து நல்லிணக்க சமூகத்தினை உருவாக்க தமது அமைச்சினூடாக முழு பங்களிப்பை செய்யவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

போர் முடிவடைந்த பின்னரும் தமிழ் மக்களது வாழ்வாதாரம், காணிப் பிரச்சினைகள் உள்ளிட்டவை தீர்க்கப்படவில்லையென தெரிவித்த அமைச்சர் மனோ, இவற்றிக்கு தீர்வுகாண ஜனாதிபதி மற்றும் பிரதமர் தீவிர முயற்சியெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

 

(யாழ் உதயன்)

Share This Post

Post Comment