ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நேற்று (திங்கள்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் டெல்லி, காஷ்மீர், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம் உட்பட இந்தியாவின் வடமாநிலங்களிலும் கடுமையாக உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நேற்று பிற்பகல் 2.10 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ் தானின் இந்துகுஷ் மலையில் பாஷியா நாத் நகருக்கு அருகே மையம் கொண்டிருந்த இந்த நில நடுக்கம் ரிக்டர் அலகில் 8.1 ஆக பதிவானதாக பாகிஸ்தான் புவி ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனால் பாகிஸ்தானின் ஸ்வாட், பெஷாவர், கசூர், கல்லார் கஹார், பைஜார் பகுதி களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. கைபர் பக்துன்க்வா பகுதியில் 96 பேர் உயிரி ழந்தனர். பஞ்சாப் மாகாணத்தில் 5 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒருவரும் கில்ஜித் பலுசிஸ் தான் பகுதியில் 3 பேரும் பலியாயினர். நேற்றிரவு நிலவரப்படி மொத்தம் 150 பேர் உயிரிழந்திருப்பதாக பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். ஸ்வாட் பகுதியில் உள்ள சைது ஷெரீப் மருத்துவமனையில் மட்டும் 200 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர். பெஷாவர் மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், ராவல் பிண்டி, குவெட்டா ஆகிய பெரு நகரங்களிலும் நிலநடுக்கத்தால் லேசான பாதிப்புகள் ஏற்பட்டுள் ளன. நிலநடுக்கப் பாதிப்பு அதிக மாக இருப்பதால் மீட்புப் பணி யில் ராணுவம் ஈடுபடுத்தப் பட்டுள்ளது. ராணுவ தளபதி மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
நிலநடுக்கத்தால் உயிரிழந் தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித் துள்ளார். உயரதிகாரிகளுடன் நேற்றிரவு அவர் அவசர ஆலோசனை நடத்தினார்.
ஆப்கானிஸ்தானில் 30 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூல் உட்பட பல்வேறு இடங்களில் நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டன. கிழக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் தாஹர், நான்கார்ஹர் ஆகிய பகுதியில் உயிரிழப்புகள் ஏற்பட்டது.
தாஹர் பகுதியில் நிலநடுக்க பீதியால் அங்குள்ள பெண்கள் பள்ளியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 18 மாணவிகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பல்வேறு குக்கிரா மங்களில் நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப் படாத தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்கானிஸ்தானை மையம் கொண்டிருந்த நில நடுக்கம் டெல்லி, காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், இமாச் சலப் பிரதேசம், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம் உட்பட இந்தியாவின் வடமாநிலங் களிலும் கடுமையாக உணரப் பட்டது.
ஜம்மு காஷ்மீரில் சோபூர், பாரமுல்லா மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகம் இருந்தன. அங்குள்ள பதுங்கு குழியில் மண் சரிந்ததில் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஸ்ரீநகரில் உள்ள ஜஹாங்கீர் சவுக் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மெட்ரோ ரயில் சேவை 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது நிலநடுக்கம் உணரப்பட்டதால் வழக்கு விசாரணை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தில் குவாலியர், சம்பல், உஜ்ஜைன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. உத்தராகண்டில் ரிஷிகேஷ், ஹரித்வார், டேராடூன் உட்பட பல்வேறு நகரங் களில் நிலநடுக்கம் உணரப் பட்டது.
இதேபோல பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களிலும் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் சாலை, தெருக்களுக்கு ஓடிவந் தனர். ராஜஸ்தானில் தலைநகர் ஜெய்ப்பூர், ஜோத்பூர் நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
(தமிழ்.திஹின்டு)