இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவலை இலங்கைக்கு வருமாறு அவசர அழைப்பினை விடுத்துள்ளனர். இவர்களது அழைப்பு தொடர்பில் இலங்கையில் இருக்கக்கூடிய இடதுசாரிகள் கட்சிகளின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் மின்னஞ்சல் மூலமாக இந்த விடயத்தைத் தெரியப்படுத்தியுள்ளார்.
அதில் மேற்குறிப்பிடப்பட்ட அழைப்பு எனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது என்றும், தென்னிலங்கையில் உள்ள மிதவாதிகளுடன் இணைந்து கடமையாற்ற நான் ஆர்வமாக உள்ளேன் என்றும், குறைந்தது அரசியல்வாதிகளின் பொய்களிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கோடு இலங்கை நோக்கி வருவதற்கு எண்ணியுள்ளேன் என்றும் டாக்டர் விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு இம்மானுவல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதற்குப் பதிலளித்த விக்கிரமபாகு, அருட்தந்தை அவர்களே உங்கள் வரவினை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றோம் என மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
அருட்தந்தை இம்மானுவல், இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக இலங்கை வரமுடியாத நிலை காணப்பட்டதால் ஜேர்மனியில் நீண்ட காலமாக வசித்து வருவதுடன் விடுதலைப்புலிகள், புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் மிக நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தமையால் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் தடைசெய்யப்பட்ட 400 இற்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் பெயர்ப்பட்டியலில் அருட்தந்தை இம்மானுவலின் பெயரும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த ஆட்சியாளர்களால் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்த அருட்தந்தைக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளமைக்கான காரணம் யாது? என்ற கேள்விகள் எழும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
(யாழ் உதயன்)