வடக்கு மாகாண சபைக்கு அடுத்த ஆண்டு 7978 மில்லியன் ரூபாய்கள் தேவை!

வடக்கு மாகாண சபைக்கு அடுத்த ஆண்டு  7978 மில்லியன் ரூபாய்கள் தேவை!

வடக்கு மாகாண சபையின் அடுத்தாண்டுக்குரிய அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதற்கு 7 ஆயிரத்து 978 மில்லியன் ரூபா தேவை என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள தேசிய வரவு-செலவுத் திட்டத்தில் குறித்த நிதியை வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கீடு செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வரவு – செலவுத் திட்டம் அரசினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாக, ஒவ்வொரு மாகாண சபைகளும், தங்களுக்குத் தேவையான நிதி மதிப்பீட்டை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். அந்த வகையிலேயே வடக்கு மாகாண சபை தனது 5 அமைச்சுக்களினூடான அபிவிருத்தி வேலைத் திட்டத்துக்கு 7 ஆயிரத்து 978 மில்லியன் ரூபா தேவை என்று மதிப்பீடு செய்துள்ளது.

விவசாய அமைச்சு ஆயிரத்து 172 மில்லியன் ரூபா தேவை என்று மதிப்பீடு செய்துள்ளது. அதில் விவசாயத் துறைக்கு 206 மில்லியனும், வாழ்வாதாரத்துக்கு 202 மில்லியனும், நீர்ப்பாசனத்துக்கு 300 மில்லியனும், கூட்டுறவுத்துறைக்கு 464 மில்லியனுமாக ஆயிரத்து 172 மில்லியன் ரூபா தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார அமைச்சு ஆயிரத்து 782 மில்லியன் ரூபா தேவை என்று மதிப்பீடு செய்துள்ளது. அதில் சுகாதாரத்துக்கு ஆயிரத்து 340 மில்லியனும், ஆயுள்வேத வைத்தியத்துக்கு 236 மில்லியனும், சமூக சேவைக்கு 104 மில்லியனும், சிறுவர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு 104 மில்லியனுமாக ஆயிரத்து 782 மில்லியன் ரூபா தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளது.

மீன்பிடி அமைச்சு ஆயிரத்து 235 மில்லியன் ரூபா தேவை என்று மதிப்பீடு செய்துள்ளது. அதில் நன்னீர் மீன்பிடிக்கு 93 மில்லியனும், போக்குவரத்துக்கு 95 மில்லியனும், கிராமிய அபிவிருத்திக்கு 237 மில்லியனும், வீதி அபிவிருத்திக்கு 810 மில்லியனுமாக ஆயிரத்து 235 மில்லியன் தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளது.

கல்வி அமைச்சு 3 ஆயிரத்து 78 மில்லியன் ரூபா தேவை என்று மதிப்பீடு செய்துள்ளது. அதில் கல்விக்கு 2 ஆயிரத்து 862 மில்லியனும், விளையாட்டுத்துறைக்கு 110 மில்லியனும், கலாசார அபிவிருத்திக்கு 105 மில்லியன் ரூபாவுமாக 3 ஆயிரத்து 78 மில்லியன் ரூபா தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளது.

உள்ளுராட்சி அமைச்சு 707 மில்லியன் ரூபா தேவை என்று மதிப்பீடு செய்துள்ளது. அதில் உள்ளுராட்சிக்கு 425 மில்லியனும், வீடமைப்புக்கு 75 மில்லியனும், சுற்றுலாத்துறைக்கு 83 மில்லியனும், கிராமிய கைத்தொழிலுக்கு 112 மில்லியனும், காணி நிர்வாகத்துக்கு 10 மில்லியனுமாக 707 மில்லியன் ரூபா தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, கடந்த ஆண்டு வடக்கு மாகாண சபை 6 ஆயிரத்து 977 மில்லியன் ரூபாவுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மத்திய அரசு ஆயிரத்து 440 மில்லியன் ரூபாவை மாத்திரமே வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(யாழ் உதயன்)

Share This Post

Post Comment