தந்தைக்குப் பின்னான தனயன் யஸ்ரினின் எதிர்காலம் ?

தந்தைக்குப் பின்னான தனயன் யஸ்ரினின் எதிர்காலம் ?

ஜஸ்ரின் ரூடோவின் மாபெரும் வெற்றிக்குக் காரணம் அவரது கட்சியின் தேர்தல் பிரச்சாரமும், அவரது தனித்துவமிக்க கவர்ச்சியும் தான் என்றால் மிகையாகாது.1968 ல் ஜஸ்ரினின் தந்தை ரூடோ, தனது முதலாவது தேர்தலில் எவ்வாறு தனக்கென ஒரு அலையை உருவாக்கி நாடாளாவிய வகையில் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தாரோ அவ்வாறே ஜஸ்ரினும் சென்ற வாரம் சாதனை படைத்திருந்தார்.

ஏனைய நாட்டவரைப் போன்றல்லாது கனடியர்கள் இப்போதெல்லாம் எந்தவொரு கட்சிக்கும் கண்மூடித்தனமாக ஆதரவளிப்பது இல்லையென்பதால், கனடிய அரசியலில் வெற்றி என்பது நிரந்தரமான ஒன்றல்ல.

ஜஸ்ரின் தனது தந்தையைவிடச் சில அம்சங்களில் சிறப்பாக நிலைகொண்டிருப்பினும், ஏனைய விசயங்களில் அவர் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கலாம்.

ஜஸ்ரினிடத்தில் காணப்படும் குறை யாதெனில், அவர் தனது தந்தையைப் போல , அதிக புத்திக்கூர்மை கொண்டவரல்ல என்று சிலர் கூறுகிறார்கள். அவர் உண்மையானவர்தான் ஆனால் தவறாக வழிநடத்தப்படலாம்.

யஸ்ரின் ரூடோவின்  ”உண்மையான மாற்றம் வேண்டும்” என்ற கோசத்தை எதிர்க்கட்சிகள் வருங்காலத்தில் சுட்டிக்காட்டிக் குற்றம் சாட்டுவதற்கு அவர் வாய்ப்பு வழங்குவதாக நடந்து கொள்ளக் கூடாது. இது தேர்தலுக்குச் சிறப்பான உத்தியாக இருக்கலாம். இதனைச் சாத்தியமாக்குவதற்கு அதிக உழைப்பு அவசியமாகும். சூழ்நிலையும் பொருந்தி வர வேண்டும்.

உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பெருமளவு நிதி அவசியம். ஆதிக்குடிகளுக்கு அளிக்கப்பட்ட தாராளமிக்க வாக்குறுதிகள் போன்றவற்றுக்கு நிதி மிக அவசியமாகும். கனடாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளதுடன் அதன் வரி வருவாயில் முன்னேற்றம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. எனவே வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார் என்ற சரமாரியான குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகும் ஆபத்து யஸ்ரின் ரூடோவுக்கு  ஏற்படலாம்.

ஸ்டீபன் ஹாப்பரை வெளியேற்ற வேண்டுமெனக் கனடியர்கள் விரும்பியபோதும், கொன்சவர்டிவ் கட்சியை அவர்கள் ஒரு இளைத்துப்போன சக்தியாகப் பார்க்கவில்லை எனச் சிலர் சொல்லுகிறார்கள். வாக்காளர்கள் அக் கட்சியின் நடைமுறைச் சாத்தியமான வரவுசெலவுத் திட்ங்கள் கொண்ட கொள்கையை ஆதரித்தனர் எனக் கூறவும் வாய்ப்புள்ளது.

இது யஸ்ரின் ரூடோவுக்குப் பாதகமாக இருப்பினும், கனடாவின் எதிர்காலம் சம்பந்தமான அவருடைய எண்ணங்களை வாக்காளர்கள் வரவேற்றனர் என்பது அவருக்கு இருக்கும் ஆதரவுக்குச் சான்றாகும். தாம் கனடியர்கள் என்ற ஒரு உணர்வை அவர்கள் கொண்டிருப்பதை யஸ்ரின் ரூடோ புரிந்துகொள்ளும் வரம்பெற்றவர் என்ற ரீதியில் அவருக்கு வரவேற்பு காணப்படுகிறது. இளையவர்களை அவர் கவர்ந்திழுத்த வசீகரம் மேலும் பல தேர்தல்களை அவர் வெற்றிகரமாகக் கையாளுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

கியூபெக் மாநிலம் பிரிந்து செல்வதற்கு எதிராகத் தந்தை ரூடோ செயற்பட்டதால் அனேகமாக நாடுதழுவிய ஆதரவு அவருக்கு ஐம்பது வருடங்களின் முன்னர் கிட்டியது. இன்று அந்த நிலை இல்லை. அன்று அவர் தனது திறமை, கவர்ச்சி என்பவற்றின் துணைகொண்டு, ஜான். எப்.கென்னடியைப் போன்ற, நிலை தளும்பாத, திறமைமிக்க ஒரு தலைவன் தமக்கும் வேண்டும் என்ற கனடியர்களின் விருப்பத்தைப் பூர்த்தியாக்கும் வகையில் நடந்துகொண்டார்.

இன்றைய நிலை சிக்கல் மிகுந்ததாகக் காணப்படினும், சுவாரசியம் மிக்கதாகவே உள்ளது. கொன்சவர்ட்டிவ் கட்சியினரும் ஜஸ்ரின் ரூடோவைப் போன்று, மக்களுடன் எவ்வாறு பேசுவதென்பதையும், அவர்கள் சொல்வதை எவ்வாறு உற்றுக்கேட்பது என்பதையும் வரமாகக் கொண்ட ஒரு தலைவரைத் தமக்குத் தேடிக்கொண்டால் சுவாரசியம் இன்னும் அதிகமாகவே இருக்கும்.

 

Share This Post

Post Comment