விஞ்ஞானி பார்கவா பத்மபூஷன் விருதைத் திரும்பத் தருகிறார்!

விஞ்ஞானி பார்கவா பத்மபூஷன் விருதைத் திரும்பத் தருகிறார்!

இந்தியாவில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவதாகக் கூறப்படுவதற்கு எதிராக அறிவுஜீவுகள் காட்டி வரும் எதிர்ப்பில் ஒரு பகுதியாக, இந்தியாவின் பிரபல விஞ்ஞானிகள், வரலாற்றாய்வாளர்களும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். பிரபல விஞ்ஞானி ஒருவர் தனக்கு அளிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை அரசுக்கே திரும்ப அனுப்ப முடிவு செய்திருக்கிறார்.

சாஹித்திய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை திரும்ப அனுப்பியதை அடுத்து, இப்போது பத்ம பூஷண் விருது பெற்ற பிரபல விஞ்ஞானி பி.எம்.பார்கவா தனக்கு அளிக்கப்பட்ட விருதை திரும்ப அனுப்ப முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருக்கிறார்.

கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு தற்போது ஓராண்டாகவே நாட்டில் நடைபெற்று வரும் ஒரு சில நிகழ்வுகள் தம்மை காயப்படுத்தியுள்ளதாக கூறியுள்ள பார்கவா, அதன் காரணமாக இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறினார். குறிப்பாக வலதுசாரி ஹிந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் அமைப்பான பாஜக, ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலின்படி செயல்படுவது வருத்தம் அளிப்பதாக பார்கவா தெரிவித்தார்.

I
மாட்டிறைச்சி உண்டதாக சந்தேகத்தில் அடித்துக் கொல்லப்பட்ட முஸ்லீம்

தமது எதிர்ப்பை தெரிவிக்க தன்னிடம் வேறெந்த ஆயுதமும் இல்லாத சூழலில் தான், இந்த விருதை திரும்ப அளிக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் உலக நாடுகளில் இருந்து தான் நூற்றுக்கணக்கான உயரிய விருதுகளை பெற்றுள்ள போதும், இந்திய அரசு தமக்கு வழங்கிய ஒரே விருது இது என்பதால் எனக்கு மிகவும் பிரியமான விருதாக இது விளங்கியதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

நாட்டில் வகுப்புவாத வெறுப்புணர்ச்சி அதிகமாகியுள்ளதாகவும், அவை முறைப்படுத்தப்பட்டு, சகிப்புத்தன்மை குறைந்துள்ளதாகவும் குறை கூறி, நூற்றுக்கணக்கான இந்திய விஞ்ஞானிகள் இணையம் மூலமாக ஜனாதிபதிக்கு மனு ஒன்றையும் அளித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாகவே விஞ்ஞானி பி.எம்.பார்கவாவின் இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இவரைப்போலவே நாட்டில் பெருகி வரும் சகிப்புத்தன்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரலாற்றாசிரியர்களும் குரல் எழுப்பியுள்ளனர்.

இதற்காக பேராசிரியர்கள் ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப், கே.என்.பணிக்கர், டி.என்.ஜா, ஏ.ஆர்.வெங்கடாசலபதி உள்ளிட்ட 59 இந்திய வரலாற்றாசிரியர்கள் கையொப்பம் இட்ட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் பன்முக பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என்றும், அது அழிக்கப்பட்டால் அதை மீண்டும் உருவாக்கவது கடினமான காரியம் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment