முந்தைய சோவியத் ஒன்றியத்தில் ‘குலக்’ முகாம்கள் என்றழைக்கப்பட்ட கடூழிய முகாம்களில் சித்ரவதை செய்யப்பட்ட பல லட்சக்கணக்கானோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதிய அருங்காட்சியகம் ஒன்று மாஸ்கோ நகரில் திறக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அரசே உருவாக்கியிருக்கும் இந்த அருங்காட்சியகம், சோவியத் சர்வாதிகாரி, ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக்காலத்தில், குறிப்பாக, 1930லிருந்து 1950 வரையிலான காலகட்டத்தில், கொல்லப்பட்டவர்களை நினைவூட்ட தேசிய மட்டத்தில் அனுசரிக்கப்பட்ட நினைவு தினத்தையொட்டி திறக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக, கே.ஜி.பி ரகசியப் போலிசின் முந்தைய தலைமையகமான லுப்யங்கா அருகே , ஆயிரக்கணக்கில் பலியானோரின் பெயர்கள் படிக்கப்பட்டன. இந்த புதிய குலக் அருங்காட்சியகம் 2001ல் நிறுவப்பட்ட முந்தைய அருங்காட்சியகத்தைவிட பெரியது.
அதிபர் விளாதிமிர் புட்டினின் ஆட்சியில், ரஷ்ய அதிகாரிகள் ஸ்டாலினின் குற்றங்களைப் பெரிதாகப் பொருட்படுத்தாத ஒரு நிலை இருந்துவந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் போது நாஜி ஜெர்மனி மீது பெற்ற வெற்றியில் ஸ்டாலினின் பங்கு குறித்தே புட்டினின் அரசு அதிகம் விளம்பரப்படுத்திவருகிறது.
ஸ்டாலினின் படங்கள் மீண்டும் பொது இடங்களில் தோன்றியிருக்கின்றன. அவர் இறந்த பின், அவருக்கு பின்னர் கம்யூனிச சர்வாதிகாரியாக வந்த நிக்கிடா குருஷேவால் 1956ல் அவரது கொள்கைகள் விமர்சிக்கப்பட்டபின் , பல தசாப்தங்களாக அவரது படங்களை வெளியிடுவது ஒவ்வாத ஒரு விஷயமாக இருந்தது
இப்போது கட்டப்பட்டிருக்கும் ஐந்து அடுக்கு அருங்காட்சியகம் ‘குலக்’ முகாம்களில் சிறைக்கைதிகளாக இருந்தவர்களது சொந்த உடமைகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
அவர்களது சிறை அறைகளின் அளவு, மகடான், அனடிர், வோர்குடா போன்ற தொலைதூர முகாம்களில் இருந்த கதவுகள் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு சிறை அறையில் 170 பேர் வரை திணித்து அடைக்கப்பட்டிருந்தனர்.
திகிலூட்டும் காட்சிகள்
மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட குழிகளுக்குள்ளிருந்து குரூரமான விஷயங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. கொலை செய்யப் பட்டவர்களைக் கட்டிவைக்கப் பயன்படுத்தப்பட்ட வயர்கள், துப்பாக்கி குண்டுகள், குண்டுகளை வைக்கப் பயன்படுத்தப்பட்ட உறைகள் போன்றவை இதில் அடங்கும்.
1930களில் இந்த பயங்கரவாத ஆட்சியின் உச்சகட்டத்தில் சோவியத் ஆட்சிக்கு எதிராக சதி செய்தனர் என்ற குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், ஒட்டு மொத்தமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
அருங்காட்சியகத்துக்குள் நுழையும் பார்வையாளர்கள், சிறைக் கதவுகள் திறந்து மூடும் கொடூரமான திகிலூட்டும் ஒலியையும், சிறைக் கூடத்தில் கேட்கும் பலத்த காலடி ஓசைகளையும் கேட்கமுடிகிறது. ரஷ்யாவில் பல்வேறு இடங்களில் இருந்த இந்த கடூழிய முகாம்களைக் காட்டும் ரஷ்ய வரைபடம் ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த முகாம்களைத்தான் ரஷ்ய நாவலாசிரியர் அலெக்சாண்டர் சோல்ஜெனிட்ஸின் தனது ” தெ குலக் ஆர்க்கிப்பெலாகோ” என்ற புதினத்தில் சித்தரித்திருந்தார். இந்தப் புத்தகம் சோவியத் ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்டிருந்தது.
ஆனால் ஸ்டாலின் மறைவுக்குப் பின்னரும் நடந்த, கருத்து மாறுபடுபவர்கள் சித்ரவதை செய்யப்பட்ட விஷயங்களை இந்த அருங்காட்சியகம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(பிபிசி தமிழோசை)