1992 ஆம் ஆண்டு பில் கிளின்ரன் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வெற்றிகரமான தேர்தல் பிரச்சார உத்தியைத் திட்டமிட்ட அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் சூத்திரதாரியான ஜேம்ஸ் கார்வில்லி, “அட அபத்தமே, பொருளாதாரமே காரணி” என்ற புகழ்பெற்ற வாசகத்தை உதிர்த்தது பலருக்கும் நினைவிருக்கலாம். 1992 ஆம் ஆண்டைப் பொருத்தவரையில் அது உண்மையாக இருக்கலாம். ஆனால், எட்டு ஆண்டுகள் கழித்து, குடியரசுக் கட்சியின் சூத்திரதாரியான கார்ல் ரோவ், கடும் பிளவுகளைக் கொண்ட விழுமியங்கள் சார்ந்த பிரச்சினைகளின் அடிப்படையில் ஜார்ஜ் புஷ் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உதவி புரிந்தார்.
2000 ஆம் ஆண்டிலும் 9/11 தாக்குதலுக்குப் பிறகு 2004 ஆம் ஆண்டில் மீண்டும் ஜார்ஜ் புஷ் வென்ற போதும் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்மானகரமான காரணிகளாக இருக்கவில்லை. மாறாக, தன்பால் புணர்ச்சியாளர் உரிமைகள், கருக்கலைப்பு, துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமை, தீவிரவாதம் போன்ற விழுமியம் சார்ந்த பிரச்சினைகளே தீர்மானகரமான காரணிகளாக இருந்தன.
நடந்து முடிந்த தேர்தலில் வாக்குகள் பிரிந்த விதம், பொருளாதாரமும் மருத்துவ நலக் கொள்கையும் தலையாயப் பிரச்சினைகளாக இருந்ததைக் காட்டினாலும், ஸ்டீஃபன் ஹார்ப்பர் தோல்வியுற்றது, அவர் பொருளாதாரத்தை வழிநடத்திச் செல்வதில் மோசமானவர் அல்லது கனடிய மக்களின் விருப்பத்திற்குரிய பொதுநல மருத்துவ சேவைக்கு எதிரானவர் என்று கருதப்பட்டதால் அல்ல. மாறாக, மூன்றில் இரு பங்கு கனடியர்களுக்கு நெருக்கமாக இருந்த விழுமியங்களை அவர் அவமதித்த காரணத்தினாலேயே தோல்வியைத் தழுவினார். பலரும் கருதுவதற்கு மாறாகக், ஹார்ப்பர் ஆட்சியில் இருந்த காலத்தில் இந்த விழுமியங்களில் அதிக மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. கனடாவின் அரசியல் ஈர்ப்பு மையம் மாறிவிட்டிருக்கவில்லை.
2011 ஆம் ஆண்டில், ஓரளவு பெரும்பான்மையுடன் ஸ்டீஃபன் ஹார்ப்பர் வெற்றி பெற்றதற்குக் காரணங்களை அலசினோமேயானால், இடசாரிகளுக்கும் – மையநிலைவாதிகளுக்கும் இடையில் நிலவிய பிளவிற்கு அப்பாற்பட்டு, பிரச்சினைகளைச் சாதுரியமாகக் கையாண்ட விதமும், பிளவுண்ட விழுமியங்கள் சார்ந்த பிரச்சினைகளில் தமது வழமையான வாக்கு வங்கித் தளத்திற்கு அப்பாலும் படிப்படியாக ஆதரவைப் பெருக்கிக் கொண்டதையுமே முக்கியக் காரணிகளாகக் குறிப்பிடவியலும்.
குறிப்பான வாக்கு வங்கித் தொகுப்புகளுக்கு (எடுத்துக்காட்டாக, வெளியுறவுக் கொள்கை சார்ந்த சமிக்ஞைகள், சிறப்பு வரிச் சலுகைகள் குறைப்பு) வாக்குறுதிகளை வழங்கியதோடுகூட, பெரும்பான்மையான கனடியர்களைக் கவர்ந்த சில பிரச்சினைகளையும் அப்போது அவரால் இனம் காண முடிந்தது.
இந்தத் தேர்தலில், குற்றங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விடயத்தில், தாராளவாதிகள் மற்றும் முற்போக்கான பழமைவாதிகளின் கடந்த கால கொள்கைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட – குற்றக் குறைப்பு குறித்தான நடைமுறை யதார்த்தங்களும் தரவுகளும் குறித்தவற்றுக்கு மாறான – ஜனரஞ்சகமான நிலைப்பாடுகளை, கொள்கை முடிவுகளைக் ஹார்ப்பர் எடுத்தார்.
வரலாற்று ரீதியாக பார்த்தோமானால், அரசாங்கங்களின் தண்டனை குறித்த கொள்கைகளைக் காட்டிலும் பொது மக்கள் அபிப்பிராயம் எப்போதும் கடுமையானதாகவே இருந்து வந்துள்ளது. இதை உணர்ந்து கொண்ட ஹார்ப்பர், அதைத் தமக்குச் சாதாமாகக் கையாள முயற்சித்தார். குற்றவாளிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை அவரது அரசாங்கம் மக்களுக்கு – குறிப்பாக அவரது வாக்கு வங்கித் தளத்திற்கு – வாக்குறுதியளித்தது.
ஜுனேரா இஷாக் என்ற இஸ்லாமியப் பெண், பர்தா அணிந்து குடியுரிமை உறுதிமொழி ஏற்பதை அனுமதித்து சமஷ்டி நீதிமன்றம் ஆணையிட்டிருந்ததையொட்டி, மற்றொரு விழுமியம் சார்ந்த பிரச்சினையும் இத்தேர்தலின்போது முன்னிலைக்கு வந்தது. அரசாங்கம் நடத்திய கருத்துக் கணிப்பில், அவர் அவ்வாறு உறுதிமொழி ஏற்பதைத் தடை செய்யப் பழமைவாத அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிக்கு 82 சதவீத கனடியர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். மதச்சார்பின்மையும் பெண்கள் உரிமைகளும் கிட்டத்தட்ட ஒரு மதமாகவே இருக்கும் கியூபெக் பிரதேசத்தில் அரசின் முயற்சிக்கு 93 சதவீத மக்களின் ஆதரவு இருந்தது. அரசியல் சட்டம் வாக்களித்திருக்கும் உரிமைகளின் அடிப்படையில் இஷாக், முகத்தை மறைத்துக் கொள்வதற்கான தமது உரிமையை நீதிமன்றத்தின் மூலமாக நிலைநாட்டிக் கொண்டபோது, அதைத் தடுக்க வழியற்ற அரசாங்கம், தனது எதிர்ப்பைப் பகட்டாக விளம்பரப்படுத்திக் கொண்டது.
குற்றமும் தண்டனையும், தண்டனைக்குள்ளான தீவிரவாதிகளின் குடியுரிமையைப் பறித்தல், பர்தா, “காட்டுமிராண்டித்தனமான பண்பாட்டு நடைமுறைகள்” குறித்து புகார் செய்யச் சிறப்புத் தொலைபேசி எண், சிரிய அகதிகள் குறித்த நிலைப்பாட்டில் இழுபறி (அதற்கு முன்னதாக, அகதிகளுக்கான மருத்துவநலத் திட்டங்களைத் திரும்பப் பெற்றது) போன்ற நடவடிக்கைகள் யாவும் பழமைவாதக் கட்சியின் வாக்கு வங்கித் தளத்திற்கு திருப்திகரமானவையாகவே இருந்தன. அவர்களுக்கும் அப்பால், பரந்துபட்ட அளவில் கனடியர்களை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கவர்ந்து இழுப்பவையாகவும் இருந்தன.
இந்த நகர்வுகள் வெகுமக்களைக் கவர்பவையாக இருந்தபோதிலும் பிற்போக்குவாதிகளால் பெரும்பான்மை வாக்குகளைப் பெறமுடியாமல் போனது ஏன்?
இவற்றைக் காட்டிலும் அடிப்படையான வேறு சில விழுமியங்கள் கனடியர்களிடையே ஆழ வேரூன்றியிருப்பதே காரணம். என்விரானிக்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு, கனடியர்கள் தமது சமூகத்தின் பன்முகத்தன்மையைத் தீவிரமாக மதிக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. நீதிக்கும் நியாயத்திற்கும் மதிப்பு தரும் நாட்டை உருவாக்குவதில் அரசாங்கத்திற்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது என்றும் நம்புகிறார்கள். பிறர் மீது பரிவு காட்டுதலும், நல்லிணக்கத்துடன் வாழ்தலும் சமூக வாழ்வின் பண்புகள் என்று நம்புகிறார்கள்.
‘பர்தா’ அணிவதைக் கனடியர்கள் விரும்பாமல் இருக்கலாம். ஆனால், அரசியல் சட்டம் உறுதயளித்திருக்கும் அடிப்படை உரிமைகளை அவர்கள் காத்திரம் வாய்ந்தவையாகக் கொள்கிறார்கள். அரவணைத்துச் செல்லுதல், நியாயம் – நீதி என்ற பரந்தவொரு கண்ணோட்டத்தை விரும்புகிறார்கள். தூக்குத் தண்டனை குறித்த பிரச்சினையில், குற்றவியல் ஆய்வுகள் சுட்டும் உண்மைகளுக்கு மாறாகக், பெரும்பான்மையான கனடியர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தே சிந்தித்தாலும், அரசாங்கங்கள் தரவுகள் வழி நின்று முடிவுகளை எடுத்தபோது அவற்றை ஏற்றுக்கொள்ளவே செய்திருக்கிறார்கள். பிளவுண்ட விழுமியங்களை முன்னிறுத்திய அரசியல் எவ்வளவு சாதுரியமாக முன் வைக்கப்பட்டாலும், பரந்துபட்ட நல நோக்கிலான மக்களின் உணர்ச்சிகளை முன்னிறுத்தும் ஒரு அரசியலைத் தடுப்பது சாத்தியமில்லாமல் போகும் ஒரு காலமும் வரும்.
அமெரிக்கக் கவிஞர் வால்ட் விற்மன், “நான் முரண்பாடுள்ளவனாகத் தெரிகிறேனா? நல்லது, நான் முரண்படவே செய்கிறேன் (நான் விசாலமானவன். பலவும் என்னுள் அடக்கம்)” என்று எழுதினார். விற்மனைப் போல, கனடிய வெகுமக்களும் பலதிறப்பட்டவற்றைத் தம்முள் கொண்டவர்கள். நம்மிடையே குறைவான தேவதைகளே இருக்கின்றார்கள். ஆனால், அவை சிறந்த தேவதைகள். அச்சம் கொள்ளாதிருக்கும்போது, நாம் தாராளத்தன்மையோடு அரவணைத்துக் கொள்பவர்களாகவே இருக்கிறோம். அச்சம் ஆட்கொண்டபோதிலும் கடுமை கொள்ளாதிருக்கும் வழியைக் கண்டடையக் கூடியவர்களாகவும் நாம் இருக்கிறோம்.
(மிச்சேல் அடம்ஸின் கட்டுரையைத் தமிழில் வளர்மதி)