அமெரிக்கச் சிறைகளில் இருக்கும் சுமார் ஆறாயிரம் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடைமுறையை அமெரிக்க நீதியமைச்சகம் துவங்கியிருக்கிறது. இவர்கள் போதைமருந்து தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள்.
அமெரிக்கச் சிறைகளில் இருக்கும் அதிகப்படியான கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முகமாக இந்த கைதிகளின் விடுதலை முன்னெக்கப்படுகிறது.
அமெரிக்க வரலாற்றில் இந்த அளவுக்கு பெருமளவிலான கைதிகள் இதுவரை ஒரே சமயத்தில் விடுவிக்கப்படுவது இதுவே முதல்முறை.
வன்முறை தொடர்பற்ற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்களின் சிறைவாசத்தைக் குறைப்பதற்கு அரசு எடுத்த முடிவின் விளைவாக இவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.அமெரிக்க மத்தியச் சிறைகளில் இருக்கும் கைதிகளில் ஏறக்குறைய சரிபாதிபேர் இப்படிப்பட்டவர்கள்.
விடுவிக்கப்படவிருக்கும் கைதிகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் வெளிநாட்டவர்கள் என்பதால் அவர்கள் அவர்களில் நாடுகளுக்கு திருப்பியனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலையை எதிர்நோக்கியிருப்பவர்களில் பலர் ஏற்கனவே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, சமூகத்தில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நிலையான கண்காணிப்பு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மற்றவர்கள் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்படுவார்கள். உலக அளவில் சிறைக்குள் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கையில் ஏறக்குறைய கால்வாசிப்பேர் அமெரிக்கச் சிறைகளில் இருக்கிறார்கள்.
(பிபிசி தமிழோசை)