இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் அகதிகளாக தங்கியிருந்த 998 குடும்பங்கள் யாழ்.குடாநாட்டின் 15 பிரதேச செயலாளர்கள் பிரிவிலும் மீள்குடியேறியுள்ளதாக மாவட்டச்செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக வடக்கு, கிழக்கின் சகல மாவட்டத்தையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் அயல்நாடான இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்று தமிழ்நாட்டின் பல முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்தனர்.
யுத்தத்தின்போது தமது உயிரை காக்கும் ஒரே நோக்குடன் இந்தியாவிற்கு சென்று நீண்டகாலம் பெரும் நெருக்கடியின் மத்தியிலும் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இலங்கையில் நிலவும் அமைதியான சூழல் காரணமாக அவர்கள் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் இதுவரையில் யாழ்.குடாநாட்டிற்கு மாத்திரம் 998 குடும்பங்களைச் சேர்ந்த 3814 பேர் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தாயகம் திரும்பியவர்கள் யாழ்.குடாநாட்டின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மீளக்குடியமர்ந்துள்ளதாக புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்பிரகாரம் தெல்லிப்பளையில் 63 குடும்பங்களும், பருத்தித்துறையில் 141 குடும்பங்களும், கரவெட்டியில் 44 குடும்பங்களும், கோப்பாய் 44 குடும்பங்களும், நல்லூர் 77, வேலணை 85, நெடுந்தீவு 44, சாவகச்சேரி 72, சன்டிலிப்பாய் 60, சங்கானை 45, உடுவில் 21, மருதங்கேணி 30, ஊர்காவற்றுறை 66, காரைநகர் 05, யாழ்ப்பாணம் 191 என மொத்தமாக 998 குடும்பங்கள் மீளக்குடியமர்ந்துள்ளதாக மாவட்ட புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
(யாழ் உதயன்)