சர்வதேச அளவில், தமிழ் மொழி, கல்வெட்டியல், திராவிட மொழியியல், மதம் மற்றும் கல்வித்துறை போன்றவற்றில் பல தசாப்தங்களாக பங்களித்த மூத்த ஈழத் தமிழ் அறிஞர், பேராசிரியர் ஆழ்வாப்பிள்ளை வேலுப்பிள்ளை, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஞாயிறன்று இரவு காலமானார். இவர் 1936 இல், வடமராட்சி புலோலியில் பிறந்தவர். இறக்கும் போது அவரது வயது 79. அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் பேராதனை பல்கலைக்கழகத்திலும் தமிழ் பேராசிரியராகவும் பீடத்தலைவராகவும் இருந்தவர். திருவனந்தபுரத்தில் இருந்த திராவிட மொழியியல் நிறுவனம் (கேரள பல்கலைக்கழகம்), சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மையம்-சென்னை, ஸ்வீடன் உப்சாலா பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்கா வர்ஜீனியா, அரிசோனா பல்கலைகழகங்களிலும் பணியாற்றினார்.
பேராசிரியர் வேலுப்பிள்ளை வீட்டில் குளியலறையில் வீழ்ந்ததினால் தலையில் ஏற்பட்ட காயங்களால் பாதிக்கப்பட்ட நிலையில் சான் பிரான்சிஸ்கோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.
பேராசிரியர் வேலுப்பிள்ளை, பேராசிரியர்கள், கைலாசபதி, சிவத்தம்பி, இந்திரபாலா, பத்மநாதன் மற்றும் சண்முகதாஸ் ஆகியோரது சமகாலத்தவர். தமிழ் வரலாற்று ஆய்வுகள் தொடர்பாகப் பேராதனை பல்கலைக்கழகத்தில் ஒப்பற்ற பல ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை ஈழத் தமிழ் உணர்வாளருமாவார். பேராசிரியர் கே.கணபதிப்பிள்ளையின் காலகட்டத்தில் 1950களில் தமிழை அவரிடம் கற்ற மாணவர் வேலுப்பிள்ளை. இலக்கணம், மொழியியல் மற்றும் ஈழத் தமிழ் கல்வெட்டுகள் பற்றிய ஆய்வில் தன்னை ஈடுபடுத்திய பேராசிரியர் வேலுப்பிள்ளை அவற்றை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்களுக்குக் கற்பிப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
வேலுப்பிள்ளை அவர்கள் இங்கிலாந்துப் பலகலைக்கழகம் ஒன்றில் தனது ஆய்விற்காகக் கலாநிதி பட்டத்தைப் பெற்றிருந்தார். மேலதிகமாக இலக்கிய ஆய்வுக்கான கலாநிதிப் பட்டமும் அவருக்குண்டு. பேராசிரியர் கே.இந்திரபாலா அவர்களோடு இணைந்து1960 களில் மைசூர் பல்கலைக்கழகத்தில் இந்திய தொல்பொருள் தலைமை கல்வெட்டு அலுவலகத்தில் கல்வெட்டியல் உயர் கல்வியையும் மேற்கொண்டவர். ஈழத் தமிழ் கல்வெட்டுகள் பற்றிய அவரது ஆய்வுகளும் பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாகும்.
1960 களில் இருந்து மிக நீண்ட காலம் பேராதனை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பிறகு, வேலுப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை பேராசிரியராகவும் தமிழ்துறைப்பீடத் தலைவராகவும் 1984 களில் இணைந்து கொண்டார்.
பேராசிரியர் வேலுப்பிள்ளை 1990 களில் ஸ்வீடன் நாட்டு உப்சாலா பல்கலைக்கழகத்தில் பௌத்த தமிழ் காவியமான மணிமேகலை குறித்த ஆய்வுகளில் பேராசிரியர் பீட்டர் ஸால்க் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்தவர். ஓய்வு பெற்ற பிறகு, அவர் அமெரிக்காவில் தனது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.
பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்களது பணிகளை மெச்சிப் பாராட்டுவதோடு அவரது பிரிவுக்காக அஞ்சலியையும் செலுத்துகிறது ”நாளை” இணையத்தளம்!