மலையக மக்களுக்காக எழுப்பப்பட்ட கோரிக்கை

மலையக மக்களுக்காக எழுப்பப்பட்ட கோரிக்கை

இலங்கையின் மலையகத்தில் மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட மலையக மக்களுக்கான வீடுகள், காணி உரிமைகள் மற்றும் உழைப்புக்கேற்ற ஊதியம் ஆகியவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வடக்கு மாகாணத்தின் பரந்தன் நகரில் எழுப்பப்பட்டிருக்கின்றது.

இலங்கை மெதடிஸ்த சபையின் பெருந்தோட்ட சமூக மேம்பாட்டுத் திருப்பணி என்ற அமைப்பின் ஏற்பாட்டில் மீரியபெத்தை மண்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ஞாயிறன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

மீரியபெத்தையில் பாதிக்கப்பட்டு இன்னும் தற்காலிக முகாமில் வசிக்கின்ற மக்களுக்கு உடனடியாக நிரந்தர வீடுகள் வழங்கப்படுவதுடன் மலையக மக்களின் லயன்- குடியிருப்பு வாழ்க்கை முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அந்தத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது.

இந்த விடயங்களைச் செயற்படுத்துவதற்கு தோட்டக் கம்பனிகளுக்கு அரசாங்கம் நிபந்தனையுடன் கூடிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மலையகத் தொழிற்சங்கங்கள் அந்த மக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஒன்றிணைந்து இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும் அல்லது தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் மற்றும் மலையக மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக வடக்கு கிழக்கு பிரதேச மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்று இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டிருக்கின்றது.

மெதடிஸ்த சபையின் பெருந்தோட்ட சமூக மேம்பாட்டுத் திருப்பணி திட்டத்தின் இணைப்பாளரும் பரந்தன் தேவாலயத்திற்குப் பொறுப்பானவருமான அருட்தந்தை செங்கன் தேவதாசனின் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் அவர் இந்த கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment