முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதில் வடக்கு மாகாணசபையின் பங்கு

முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதில் வடக்கு மாகாணசபையின் பங்கு

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட, தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதிலும் வடக்கு மாகாணசபையே முன்னின்று செயற்பட வேண்டும் என்று தமிழ் முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்கான அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கலந்துரையாடலில் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருக்கின்றது.

இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு என்ன வகையிலான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து ஆராயப்பட்ட இந்தக் கலந்துரையாடலில் தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான நல்லுறவை வளர்ப்பதிலும் வடக்கு மாகாணசபையே முன்னின்று செயற்பட வேண்டும் என்ற கருத்தும் இந்த கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

இது குறித்து கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண சமூகசேவைகள், புனர்வாழ்வு மற்றும் சிறுவர், பெண்கள் நலன்களுக்கான அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம், முஸ்லிம் மக்கள் மட்டுமல்ல, இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்ற குறைபாடு ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இது அரசாங்கத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கையில் உள்ள பொதுவான குறைபாடு என்று தெரிவித்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற வடமாகாண சபைக்கு மீள்குடியேற்ற நடவடிக்கையில் கருத்து தெரிவிப்பதற்கோ செயற்படுவதற்கோ உரிய சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த காலங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக ஒரு முஸ்லிம் அமைச்சரே இருந்தார். முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டுக்கு அவரே பொறுப்பாவார் என்று தெரிவித்த அமைச்சர் சத்தியலிங்கம், ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கு மாகாண சபையின் அனுசரணையுடனேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று இப்போதைய மத்திய அரசின் மீள்குடியேற்ற அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.

எனவே, மீள்குடியேற்ற நடவடிக்கையில் தமிழ்-முஸ்லிம் என்ற பாகுபாடுகள் இல்லாமல் வடக்கு மாகாண சபை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும், இரண்டு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம்-நல்லுறவுக்கான நடவடிக்கைகள் வடக்கு மாகாண சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சத்தியலிங்கம் கூறினார்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment