இரகசிய ஆவணங்களை கசியவிட்டதான சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாட்டிகன் தெரிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் பாதிரியார், மற்றொருவர் கத்தோலிக்கத் திருச்சபை தலைமையகத்தின் முன்னாள் ஊழியர்.
கத்தோலிக்கத் திருச்சபையின் நிதி நிர்வாக விஷயங்களை சீர்திருத்த போப் பிரான்சிஸ் அவர்களால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவில் இந்த இருவரும் உறுப்பினர்களாக இருந்தனர்.
வாட்டிகனில் நடைபெறும் ஊழல்கள் குறித்து புலனாய்வு செய்துவரும் செய்தியாளர்களிடம், இந்த ஆணைக்குழு ஆவணங்களை வழங்கினர் என கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்த ஆவணங்களின் அடிப்படையிலேயே, வாடிக்கனின் நிதி விஷயங்கள் தொடர்பிலான சர்ச்சைக்குரிய இரண்டு புத்தகங்கள் எதிர்வரும் நாட்களில் வெளியாகவுள்ளன என்று கருதப்படுகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு முன்னர் இருந்த போப் பெனடிக்ட் அவர்களுக்கு சமையல்காரராக இருந்தவரால் கசியவிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில், செய்தியாளர் ஒருவர் ஒரு தொகுதி ஆவணங்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(பிபிசி தமிழோசை)