திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி, உச்சநீதிமன்றத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் தாக்கல்செய்திருந்த மனு ஒன்றில், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை நீக்க கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பாக இன்று நடைபெற்றது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜராகிய ஆனந்த் குரோவர், இது தொடர்பான வழக்கு விசாரணைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார். இதன் காரணத்தால் கனிமொழியின் மனு மீதான விசாரணையை ஏற்க கூடாது என்றும் அவர் அப்போது வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்டு கனிமொழியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், கனிமொழி உள்ளிட்டோர் குற்றவாளிகளா இல்லையா என்பதை வழக்கு நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றமே இறுதி செய்யும் என்றும் கூறினர்.
கனிமொழியின் மனு போன்ற அதே கோரிக்கைகளை கொண்டிருந்த ஷாஹித் பல்வாவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திமுக தலைவர் மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை இந்த வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைவும் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தள்ளுபடி செய்தது.
சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மீதும் 9 நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த வழக்கின் விசாரணை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் தனித்தனியாக தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் தொலைக்காட்சியில் சட்டவிரோதமாகப் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி, அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில் கலைஞர் டிவிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தரப்பில் ரூ. 200 கோடி பணம் வழங்கப்பட்டது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம் அதற்கு கைமாறாக கலைஞர் டிவிக்கு அந்த 200 கோடி ரூபாய் பணத்தை அளித்ததாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
(பிபிசி தமிழோசை)