நான் என்று வாழ முற்பட்டதே இன்றைய சமூகச் சீரழிவுக்குக் காரணம்!

நான் என்று வாழ முற்பட்டதே இன்றைய சமூகச் சீரழிவுக்குக் காரணம்!
யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் கலந்து கொண்டு உரையாற்றுகையில், யாழ்.பல்கலை ஊழியர்கள் மனமகிழ்வுடன் இருந்தால்தான் மாணவ சமுதாயம் வெற்றி வாகை சூடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
யாழ்.பல்கலையின் சமூகத்தின் கடந்த கால நடவடிக்கைகள் எம்மை மகிழ்வூட்டுகின்றன.குறிப்பாக பல்கலை அமைப்பு முறைக்கு மோசமான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதை நீங்கள் எதிர்த்தீர்கள்,அரசியல் கட்சி ஒன்று அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டு அச்சுறுத்தலை விளைவித்தபோது அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது அதனையும் எதிர்த்தீர்கள்.இவை ஒவ்வொன்றும் வரவேற்கப்பட வேண்டிய விடயங்கள்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானால்; பேராதனை,கொழும்பு பல்கலைக்கழகங்களுக்கே செல்ல வேண்டிய நிலைகாணப்பட்டது. வறிய மாணவர்கள் பலர் நிதி நெருக்கடிப் பிரச்சினையால் பட்டப்படிப்பை தொடரமுடியாமல் க.பொ.த உயர்தரத்துடன் கல்விச் செயற்பாட்டை நிறுத்திக் கொண்டு தொழில்  வாய்ப்புக்களைத் தேடிச் சென்றார்கள்.ஆனால் 1974ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகம் தோற்றம் பெற்றதால் பல வறிய மாணவர்களின் பெற்றோர்கள் அமைதிப் பெருமூச்சுவிட்டதை அறிவீர்கள்.
1974ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரைக்கும் யாழ்.பல்கலைக்கழகம் பட்டாதாரிகளையும்,கல்விமான்களையும் உருவாக்கியது.2009ஆம் ஆண்டும் அதற்குப் பிற்பட்ட காலத்தில் யாழ்.பல்கலைக்குள் அரசியல் தலையீடு.நிர்வாக சீர்கேடு,முறையற்ற நியமனம் இரத்த புற்றுநோயாக பரவத் தொடங்கியது.
இன்றைய காலகட்டம் பண்பாடற்ற கெட்ட சமுதாயத்தையே சுட்டி நிற்கிறது. போதைப் பாவனை, சிறுவர் துஸ்பிரயோகம், சிறுவர்களை வேலைக்கு அமர்த்தல், பாலியல் வன்புணர்வு போன்றன தற்போது தலைதூக்கியுள்ளன.இவ்வாறான சமூக சீரழிவுக்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்க்குமிடத்து நாம் என்று வாழ்ந்த காலம் போய் நான் என்று வாழத் தலைப்பட்டுள்ளது என்பதே ஆகும்.
எனவே குறித்த சமூக சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் .சமூக சீரழிவை தடுக்கும் தார்மீக பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்றார்.
(யாழ் உதயன்)

 

Share This Post

Post Comment