வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் இந்த அரசாங்கத்தை மக்கள் குப்பைக் கூடைக்குள் தள்ளி விடுவார்கள் என பிரபல ஊடகவியலாளர், விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.
புரவசி பலய அமைப்பின் கொள்கைப் பிரகடன நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டை ஆட்சி செய்யும் இரண்டு தலைவர்களும் நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியுள்ளனர்.
இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் இந்த இரண்டு தலைவர்களினதும் அரசாங்கத்தையும் கடந்த அரசாங்கத்தைப் போன்றே மக்கள் நிராகரித்து விடுவார்கள்.
சுதந்திரத்தின் பின்னர் நாட்டை தனித்தனியாக ஆட்சி செய்து வந்த கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து நாட்டை அபிவிருத்தி செய்ய முயற்சிக்கின்றமை வரவேற்கப்பட வேண்டியது.
போர் காரணமாக காயமடைந்த இதயங்களை ஆற்றுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை மேற்கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த இரண்டு கட்சிகளினதும் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டை நல்லாட்சி நோக்கி நகர்த்தும் அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.நல்லிணக்கத்தை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
(யாழ் உதயன்)