இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்ப இந்திய அரசு உதவ வேண்டும்!

இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்ப இந்திய அரசு உதவ வேண்டும்!

இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்பவும் அவர்கள் அங்கு குடியேறவும் தேவையான உதவிகளை இந்திய அரசு வழங்க வேண் டும் என்று ஈழ அகதிகள் மறுவாழ்வு மைய பொருளாளர் எஸ்.சி.சந்திரஹாசன் வலியுறுத்தினார்.

அரசியல் மற்றும் பொது கொள்கைகளுக்கான ‘தி இந்து’ மையம் சார்பில் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கம், சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ‘இந்து’ என்.ராம், ‘‘இலங்கை பிரச்சினை 33 ஆண்டுகளாக இருந்து வருகிறது. 3 லட்சம் அகதிகள் இந்தியாவுக்கு வந்தனர். அதில் 2 லட்சம் பேர் திரும்பிவிட்டனர். இன்னும் ஒரு லட்சம் பேர் 109 முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களின் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது’’ என்றார்.

ஃபிரன்ட்லைன் இதழின் மூத்த துணை ஆசிரியர் ஆர்.கே.ராதா கிருஷ்ணன், தமிழகம் முழுவ தும் உள்ள முகாம்களில் அகதிக ளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள், அவர்களது சிரமங்கள், இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்கும் இலங்கை திரும்புவதற்கும் உள்ள சிரமங்களை எடுத்துரைத்தார்.

சந்திரஹாசன் பேசும்போது, ‘‘கடந்த 35 ஆண்டுகளாக இலங்கை அகதிகள் மீது இந்திய அரசும், தமிழக அரசும் மிகவும் பெருந்தன்மையுடனும் கரிசனத்துடனும் நடந்து கொண்டுள்ளன. எங்களுக்கு அளித்த ஆதரவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். தற்போது, இலங்கையில் போர் முடிந்து விட்டதால், அடுத்தகட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பெரும்பான்மையான மக்கள் இலங்கை திரும்பி தம் உரிமைகளை பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய அரசும், தமிழக அரசும் செய்ய வேண்டும். யாரையும் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. இந்தியாவில் இருப்பதும் இலங்கை திரும்புவதும் அவரவரின் தனிப்பட்ட முடிவு. இதற்கு ‘தி இந்து’ நாளிதழ் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’’ என்றார்.

மேற்குவங்க முன்னாள் ஆளுநரும், முன்னாள் தேசிய பாது காப்பு ஆலோசகருமான எம்.கே.நாராயணன் பேசும்போது, ‘‘இலங்கை அகதிகள் நாடு திரும்பவும், அவர்கள் மீண்டும் குடியேற நிதி உதவி செய்வதற்கும் இந்திய அரசுக்கு எந்தத் தடையும் இருக்காது என கருதுகிறேன். அகதிகள் விஷயத்தில் உலகளவில் மனமாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கு இருக்க விரும்புவோருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதிலும் தடை இருக்காது. இது சாத்தியமானது தான். இந்த முயற்சிகள் நிறைவேற இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம்’’ என்றார்.

(தி இந்து)

 

Share This Post

Post Comment