24 பிரமுகர்கள் தங்களது தேசிய விருதுகளை திருப்பி அனுப்புகின்றனர்!

24 பிரமுகர்கள் தங்களது தேசிய விருதுகளை திருப்பி அனுப்புகின்றனர்!

இந்தியாவில் பாஜக ஆட்சியின் கீழ் நிலவுவதாகக் கூறப்படும் சகிப்பின்மைச் சூழலைக் கண்டித்து எழுத்தாளர்கள்,கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தமக்கு அளிக்கப்பட்ட விருதுகளைத் திரும்பத்தரும் போராட்டத்தில் திரையுலகக் கலைஞர்களும் குதித்துள்ளனர்.

இந்தியத் திரையுலகைச் சேர்ந்த 24 பிரமுகர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளைத் திருப்பி அளிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றனர்.

இந்தப் பட்டியலில் புக்கர் விருதுபெற்ற பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயும் இணைந்துள்ளார்.

கடந்த 1988ல் வெளிவந்த ” இன் விச் அன்னி கிவ்ஸ் இட் தோஸ் ஒன்ஸ்” (In Which Annie Gives it Those Ones) என்ற ஆங்கிலப்படத்துக்கு திரைக்கதை எழுதியதற்காக, 1989ம் ஆண்டில் தனக்கு அளிக்கப்பட்ட அந்த விருதை அருந்ததி ராய் திரும்பத் தருவதாக அறிவித்திருக்கிறார்.

விருதுகளைத் திரும்பத் தர முடிவெடுத்துள்ள திரையுலகப் பிரமுகர்கள் பட்டியலில், சயீத் மிர்சா, குந்தன் ஷா, ஆகிய மூத்த திரை இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர் விரேந்திர சைனி ஆகியோரும் அடங்குவர்.

பெருகி வரும் சகிப்புத் தன்மையற்ற போக்கு மற்றும் மத்திய அரசு மக்களின் எதிர்ப்புக் குரல்களுக்கு செவிசாய்க்காமல் புறக்கணிப்பது ஆகியவை முக்கிய காரணங்களாக இவர்களால் முன்வைக்கப்படுகின்றன.

சாகித்ய அகாடமியின் விருது கடந்த 2005 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட போதே அதை ஏற்க மறுத்திருந்த அருந்ததி ராய், அதற்கு முன்பு பெற்றிருந்த தேசிய விருதை தற்போது திருப்பி அளிக்க முடிவெடுத்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய பத்திரிகை ஒன்றில் எழுதிய கட்டுரையில், அருந்ததிராய் சகிப்பின்மைக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் இந்த சூழலில்,தேசிய விருதை திரும்ப அளிப்போர் பட்டியலில் சேர, தான் பெற்ற ஒரு விருதை கண்டெடுக்க முடிந்தது மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

எனினும் விருதுகளை திரும்ப அளிக்கும் விவகாரம் தொடர்பில் நடைபெற்று வரும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டாளர்கள் பட்டியலில் என்னை சேர்த்துவிடாதிர்கள் என்றும் அவர் கோரியுள்ளார். அது தொடர்பான விளக்கத்தில் அவர் கூறும் போது, 2005 ஆம் ஆண்டு, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் பொறுப்பு வகித்த போது தான் சாகித்ய அகாடமியின் விருதை ஏற்க மறுத்ததை சுட்டிக்காட்டினார்.

தான் ஏதோ தற்போதைய அரசால் ஊக்குவிக்கப்பட்டுவரும் ” சகிப்பின்மை” அதிகரித்துவருவது கண்டு அதிர்ச்சி அடைந்ததாலேயே இந்த விருதை திரும்ப அளிக்கவில்லை என்று கூறும் அருந்ததி ராய்,ஒருவரை பலர் சேர்ந்து அடித்துக் கொல்வது, துப்பாக்கியால் சுடுவது, தீவைத்துக் கொல்வது, சக மனிதர்களைக் கும்பல் கும்பலாக கொலை செய்வது போன்றவை ” சகிப்பின்மை” என்ற சொற்பிரயோகத்தின் கீழ் வராது என்று சாடினார்.

மேலும், நமக்கு என்ன நடக்கும் என்பது குறித்து முன்பே தகவல்கள் இருந்த நிலையில், இந்த அரசு பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் நடந்த எது குறித்தும் தன்னால் அதிர்ச்சி அடைய முடியவில்லை என்றார் அருந்ததி ராய்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment