இலங்கையில் காணாமல்போனவர்கள் குறித்து விசாரித்துவரும் ஆணைக்குழு மீண்டும் வடக்கு மாகாணத்தில் தமது விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சாட்சியங்களை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதால் வடக்கு மாகாணத்துக்கு செல்ல வேண்டியுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேக்ஸ்வெல் பரணகம பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஆணைக்குழு வடக்கு-கிழக்கு மாவட்டங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தியிருந்தது.
இப்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று அறியப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கானவர்களிடம் இன்னும் விசாரணைகளை நடத்த வேண்டியதுள்ளது எனவும் மேக்ஸ்வெல் பரணகம கூறுகிறார்.
பாதுகாப்புப் படையினர் தரப்பிலிருந்து சுமார் ஐயாயிரம் முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். தமிழர் தரப்பிலிருந்து 16,000க்கும் அதிகமான முறைப்பாடுகள் வந்துள்ளன என்றும், அவற்றில் 4000 பேர் தொடர்பான விசாரணைகள் மட்டுமே முடிவடைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
தமது ஆணைக்குழுக்கு இப்போது கூடுதலாக இரண்டு ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் விசாரணைகளை விரைவாக முன்னெடுக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
வெள்ளைக் கொடி விடயம் தொடர்பில் மேலும் விசாரணைகள் நடைபெற வேண்டும் என்று தமது ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தாலும், அது குறித்து முடிவெடுப்பது அரசால் எடுக்கப்பட வேண்டிய ஒரு அரசியல் தீர்மானம் எனவும் மேக்ஸ்வெல் பரணகம் கூறினார்.
(பிபிசி தமிழோசை)