உலகத்தில் அதி கூடிய எண்ணெயை உற்பத்தி செய்யும் நாடாகக் கடந்த வருடத்திலிருந்து அமெரிக்கா திகழ்கிறது. ஆயினும் அதன் எண்ணெய் தேவை இன்னும் கூடிச் செல்வதாகவும் அந்த நாட்டுப் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கினையும் ஆற்றுகிறது.
பத்து வருடங்களுக்கு முன்பாக ‘கீஸ்ரோன் டிஎக்ஸ்எல்’ திட்டம் முன்வைக்கப்பட்டது. அதன் படி மசகு எண்ணெய் இராட்சத நில அடிக்கீழ் குழாய்கள் மூலம் (1897 கிலோ மீற்றர்கள் ) அல்பேட்டாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு நெபாராஸ்காவில் சுத்திகரிக்கப்படும் என்பதாகும். இதன் மூலம் எட்டு இலட்சத்து முப்பதினாயிரம் பீப்பாய்கள் மசகு எண்ணெய் நாளொன்றுக்கு சுத்திகரிப்பதற்காக எடுத்துச் செல்லப்படும். இதனால் அமெரிக்கா மற்றைய எண்ணெய் வள நாடுகளில் தங்கியிருக்கும் சூழ்நிலை 40 சதவீதத்தால் குறைக்கப்படும்.
எட்டு பில்லியன்கள் செலவிலான இத்திட்டத்தை இன்று ஒபாமா நிராகரித்துள்ளார். இந்தத் திட்டத்தினால் நீண்ட கால அளவில் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என்றும் ஒபாமா கூறியுள்ளார். அடுத்து வரும் அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஹில்லறி கிளின்ரனும் இத்திட்டத்தை நிராகரித்துள்ளார்.
ஒபாமாவின் இத்திட்ட நிராகரிப்பு குறித்து கனடியப் பிரதமர் ரூடோ தனது ஏமாற்றத்தைத் தெரிவித்த அதே வேளையில் அமெரிக்காவின் முடிவுக்குத் தான் மதிப்பளிப்பதாகத் தெரிவித்துள்ளார். கனடாவிலும் அமெரிக்காவிலும் உள்ள சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களின் பெரும் எதிர்ப்பு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்து வந்திருக்கின்றது. இத் திட்டத்தில் அல்பேர்ட்டாவில் இருந்து அனுப்பட இருந்த மசகு எண்ணையானது மண்ணோடு சேர்ந்த எண்ணெய் (oil sands) என்பது குறிப்பிடத்தக்கது.