பீகார் தேர்தல் முடிவு வகுப்புவாதத்துக்கு எதிரானது – ஜி.ராமகிருஷ்ணன்

பீகார் தேர்தல் முடிவு வகுப்புவாதத்துக்கு எதிரானது – ஜி.ராமகிருஷ்ணன்

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் பாஜகவுக்கு கிடைத்த தோல்வி, சங்க பரிவார் அமைப்புகள் ஹிந்துத்துவா செயல்திட்டத்தை முன்னெடுக்க எடுத்த முயற்சிகளால் ஏற்பட்டது என்கிறார் தமிழ் நாடு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.

பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில், பீஹாரில் பிரதமர் நரேந்திர மோடி முன்பு எந்தப் பிரதமரும் செய்யாத வகையில் தீவிரமாக இறங்கி தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனாலும், பீஹார் மக்கள், அவரது கட்சியின் ஹிந்துத்துவா செயல்திட்டத்தை நிராகரித்துவிட்டனர் என்றார்.

இடதுசாரிக்கட்சிகள் பீஹாரில் படுதோல்வி அடைந்திருப்பதைப் பற்றி கேட்டதற்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் மற்றும் பிஜேபி கடைப்பிடிக்கும் அதே பொருளாதாரக் கொள்கையையே பீஹாரில் இருக்கும் பிராந்தியக் கட்சிகளும் கடைப்பிடிக்கிறார்கள் என்று கருதியதால், இடதுசாரிகள் அந்தக் கட்சிகளுடன் உறவு தேவையில்லை என்று முடிவெடுத்தனர். ஆனால் மக்கள் வகுப்புவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இடது சாரிக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை என்பது உண்மை என்ற அவர், இது குறித்து அம்மாநில இடது சாரிக்கட்சிகள் ஆராயும் என்றார்.

பீஹார் அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது, தமிழகத்தில் இடது சாரிக்கட்சிகள் மூன்றாவது அணி என்ற நிலைப்பாட்டை எடுப்பது சரியா என்று கேட்டதற்கு, பீஹார் நிலைமை வேறு, தமிழக நிலைமை வேறு என்று கூறிய ராமகிருஷ்ணன், தமிழ்நாட்டில் கடந்த சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான காலமாக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தொடர்ந்து ஆட்சியில் உள்ள திராவிடக் கட்சிகளே காரணம் என்றார்.

மேலும், தங்களது புதிய மக்கள் முன்னேற்ற அணி, குறைந்த பட்ச செயல்திட்டத்தை முன்வைத்து களத்தில் நிற்கிறது. இது போல ஒரு திட்டத்துடன் எந்த அணியும் முன்பு கூட்டணி உருவாக்கியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment