ரஷ்ய தடகள வீரர்கள் பரந்துபட்ட அளவில் ஊக்க மருந்தை பயன்படுத்தினர் என மிகக் கடுமையாக விமர்சிக்கும், ஊக்க மருந்து பயன்பாட்டுக்கு எதிரான சர்வதேச அமைப்பான ”வாடா”வின் அறிக்கை ஆதாரமற்றது என ரஷ்யா கூறியுள்ளது. ஊக்க மருந்து பயன்பாட்டில் ரஷ்ய தடகள வீரர்கள் ஈடுபட்டதால் அவர்கள் போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என ”வாடா” கோரியிருந்தது.
இதற்கான ஆதரங்கள் தமக்கு அளிக்கப்படும் வரையில், இந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம் என ரஷ்ய அதிபரின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகிறார்.
மாஸ்கோவில், தடகள வீரர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் ஊக்க மருந்து இருந்ததா என்பது குறித்த சோதனைகளை செய்துவந்த சோதனைக்கூடம் செயல்படுவதை நிறுத்தியுள்ளது என, ரஷ்யாவில் ஊக்க மருந்து பயன்பாட்டுக்கு எதிரான அமைப்பின் தலைவர் கூறுகிறார்.
இதனிடையே ரஷ்யா மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு இந்த வார இறுதிக்குள் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என சர்வதேச தடகள சம்மேளனத்தின் தலைவர் சபாஸ்டியன் கோ கோரியுள்ளார்.
(பிபிசி தமிழோசை)