சர்வதேசத் தடகளச் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் லமைன் டியாக் ஊழலில் ஈடுபட்டார் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் முறையான விசாரணை பிரான்ஸில் தொடங்கியுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு பல ரஷ்ய தடகள வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தினர் எனும் குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்ட பின்னரும், பணம் பெற்றுக்கொண்டு அவர்கள் மீதான தடையை ஒத்தி வைத்தார் என லமைன் டியாக் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பதினாறு ஆண்டுகள் சர்வதேசத் தடகளச் சம்மேளனத்தின் தலைவராக இருந்த அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அப்பதவியிலிருந்து விலகினார்.
உலகளவில் தடகள விளையாட்டில் ஈடுபடும் முன்னணி வீரர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஊக்க மருந்து பயன்பாட்டுக்கு எதிரான விதிகளை கடைபிடிக்கவில்லை என்று கூறிய ஆய்வு ஒன்றை, அந்தச் சம்மேளனம் வெளியே வராமல் அமுக்கியது என அதன் மீது அண்மையில் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்ன.
எனினும் தடகள விளையாட்டில் பரந்துபட்ட அளவில் ஊக்க மருந்து பயன்பாடு உள்ளது என்பதை சர்வதேச சம்மேளனம் எப்போதுமே மறுத்துள்ளது.
(பிபிசி தமிழோசை)